செறிவினானும், இயங்குறுப்புக்களின் இயக்கத்தானும் அவ்வோசை வெவ்வேறெழுத்தொலிகளாய்த் திறப்படத் தெரிவன ஆயின என்க. இயங்குறுப்புக்களின் அமைப்பினான் வரிவடிவம் செய்துகொள்ளும் நெறியை உய்த்துணரவைத்தார் தொன்னூலார். என்னை? வரிவடிவம் காலந்தொறும் எழுதுகருவி, எழுதப்படும் கருவிகட்கு ஏற்ப மாறுபடுதலின். |
உலகமொழி எழுத்துக்கள் யாவற்றிற்கும் பொருந்த எழுத்தொலிக் கோட்பாடுகளை விளக்கும் இச்சூத்திரத்தின் நுட்பங்களை விரிக்கின் பெருகுமாகலின் மாணாக்கர் ஆய்ந்துணர்க. |
சூ. 84: | அவ்வழிப், |
| பன்னீ ருயிரும் தந்நிலை திரியா |
| மிடற்றுப் பிறந்த வளியின் இசைக்கும் |
(2) |
க-து: | இதுமுதல் இந்நூலுள் வகுத்துக் கொண்ட எழுத்துக்களின் பிறப்பியல் கூறத் தொடங்கி முதற்கண் உயிர் எழுத்துக்கட்கு வளியிசைக்களன் கூறுகின்றனர். |
பொருள்:மேற்கூறிய நெறிமுறைமையான் உயிர்எழுத்துப் பன்னிரண்டும் தம்தன்மை திரியாவாய் மிடற்று வளியினாற் பிறந்திசைக்கும். தம்நிலையாவது குறில், நெடில், மாத்திரையளவு ஆகிய தன்மைகளாம். வினைக்கள முயற்சி மேற்கூறுவார். |
சூ. 85: | அவற்றுள் |
| அஆ ஆயிரண்டு அங்காந் தியலும் |
(3) |
க-து: | உயிரெழுத்துள் முதலிரண்டற்கு வினைக்கள முயற்சி கூறுகின்றது. |
பொருள்:மேற்கூறிய உயிர் பன்னிரண்டனுள் அகரம் ஆகாரமாகிய இரண்டும் அண்ணத்தின் செயலாகிய அங்காத்தல் முயற்சியான் வெளிப்பட்டு இயலும். அங்காத்தல்=அண்ணாத்தல். |
இரண்டும் என்னும் உம்மை தொக்கது. முயற்சி ஒன்றாகக் கூறப்படினும் அவைதம்முள் இசை வேறுபாடுடைய என்பதறிவித்தற்கு ஆயிரண்டு என விளங்கக் கூறினார். மேல் வரும் அப்பாலைந்தும் என்பதற்கும் இவ்விளக்கம் ஒக்கும். ‘‘அங்காப்ப’’ என்னும் செயவெனச்சந் திரிந்து நின்றது. |
சூ. 86: | இஈ எஏ ஐஎன இசைக்கும் |
| அப்பால் ஐந்தும் அவற்றோ ரன்ன |
| அவைதாம் |
| அண்பல் முதல்நா விளிம்புற லுடைய |
(4) |
க-து: | உயிருள் ஐந்தற்கு வினைக்கள முயற்சி கூறுகின்றது. |