பொருள்:உயிர் எழுத்துக்களுள் இஈ எஏ ஐ என்று சொல்லப்படும் அவ்ஐந்து எழுத்துக்களும் மேற்கூறியவற்றொடு ஒத்த தன்மையவாம்; அவை அண்பல்லடியை நாவினது விளிம்பு பொருந்துதலாகிய முயற்சி உடையவாய்ப் பிறக்கும். |
அகரஆகாரம் போலாது அங்காத்தல் முயற்சி ஓரளவே உடைமையின் அவற்று ‘‘ஓரன்ன’’ என்றார். நாவிளிம்பால் அணுகப்படும்பல் அண்பல் எனப்பட்டது. இசைத்தல்=சொல்லப்படுதல். அவைதாம், எனப்பிரித்துக் கூறியதன் கருத்து, அடுத்துவரும் எழுத்துக்கட்கும் அங்காப்பு முயற்சி உண்டு என உணர்த்துதற்காம். இயலும் என்றது மேற்சூத்திரத்தினின்று கூட்டிக் கொள்ளப்பட்டது. இது பிறப்பியலாதலின் நெடுங்கணக்கு முறையானன்றிப் பிறப்பிக்கும் உறுப்பு அடிப்படையில் எழுத்துக்களை நிரல்படுத்து இலக்கணம் கூறுகின்றார். |
சூ. 87: | உஊ ஒஓ ஒளஎன இசைக்கும் |
| அப்பால் ஐந்தும் இதழ்குவிந் தியலும் |
(5) |
க-து: | உயிருள் எஞ்சிய ஐந்தற்கு வினைக்களமுயற்சி கூறுகின்றது. |
பொருள்: உயிரெழுத்துக்களுள் உஊஒஓஒள என்று சொல்லப்படும் அவ் ஐந்து எழுத்துக்களும் அங்காத்தலுடன் இதழ் இரண்டும் முன்னோக்கிக் குவிதலாகிய முயற்சியாற் பிறக்கும். |
சூ. 88 : | தத்தம் திரிபே சிறிய என்ப |
(6) |
க-து: | உயிர்எழுத்துக்களின் முயற்சிப் பிறப்பிற்குப்புறனடை கூறுகின்றது. |
பொருள்: மேல் சிலவும் பலவுமாக ஒருங்கு வைத்து உயிரெழுத்துக்கட்கு வினைக்கள முயற்சி கூறப்பட்டிருப்பினும் ஒவ்வொன்றும் தம்முள் சிறிது வேறுபாடுடையவாம். |
குறிலும் நெடிலும் ஒன்றிலிருந்து ஒன்று நீடலும் குறுகலுமின்றித் தனித்தனியே பிறத்தலான் அவற்றின் திரிபு உணரப்படும். இகர ஈகாரங்கள் அண்பல்லை நாவிளிம்பு நன்கு பொருந்தவும், எகர ஏகாரங்கள் ஓரளவு பொருந்தவும், ஐகாரம் அணுகிப் பொருந்தவும் பிறத்தலை இசைத்துக் கண்டுகொள்க. அவ்வாறே உகர ஊகாரங்களின் முயற்சியும் ஒகரஓகாரங்களின் முயற்சியும் ஒளகாரத்தின் முயற்சியும் வேறுபடுதலை இசைத்துக் கண்டு கொள்க. |
இப்புறனடையை இனிவரும் மெய்யெழுத்து, சார்பெழுத்துக்களின் பிறப்பு விதிகளுள் இணைத்துக் கூறப்பெறும் எழுத்துக்கட்கும் கொள்க. இச்சூத்திரம் அரிமாநோக்காக நின்றது |