பிறந்த வளியினி சைக்கும்’’ என்றும் மெல்லெழுத்துக்கள் “மூக்கின் வளியிசை யாப்புறத் தோன்றும்’’ என்றும் கூறியுள்ளமையானும் இடையெழுத்துக்களுள் யகரம் மிடற்றெழுவளியிசையால் தோன்றும் எனப்புலப்படுத்தி ஏனைய இடையெழுத்துக்களுக்கும் அதுவே என உய்த்துணரவைத்தமையானும், எஞ்சிய நெஞ்சு வளி வல்லெழுத்திற் குரியது என்பது பெறப்படும். |
வல்லெழுத்துக்கட்கும் மிடற்றுவளியிசையையே கொள்ளலாகாதோ எனின்? ஆகாது. என்னையெனின்? உயிரெழுத்துக்களையும், இடையெழுத்துக்களையும் போலாமல் நெஞ்சினிடமாக அடர்ந்தெழும் காற்றான் உந்தப்பெற்று வெளிப்படுதலின் மிடற்றுவளியின் வேறாகக் கொள்ளப்படுமென்க. |
ஈண்டுக் கூறப்படும் எழுத்துப் பிறப்புவிதிகள், பின்னர்க் கூறப்படும் சொற்புணர்ச்சிக்கண் எய்தும் இயல்பும் திரிபுமாகிய வேறுபாடுகளை உணர்த்தற்குரிய அளவே சுருங்க ஓதப்பட்டுள்ளன. ஆசிரியர் பிறப்பியலின் ஏனைய நுட்பமெல்லாம் கூறினாரல்லர் என அறிக. |
சூ. 93: | அண்ணம் நண்ணிய பல்முதல் மருங்கின் |
| நாநுனி பரந்து மெய்யுற ஒற்றத் |
| தாம்இனிது பிறக்கும் தகார நகாரம் |
(11) |
க-து: | மெய்யெழுத்துள் தகர நகரங்கட்கு வினைக்கள முயற்சி கூறுகின்றது. |
பொருள்:தகரமும் நகரமுமாகிய மெய்யெழுத்துக்கள் தாம், அண்ணத்தைப் பொருந்தியிருக்கும் பற்களின் அடிப்பகுதியின் இருபக்கங்களிலும் நாவினது முற்பகுதி விரிந்து தனது வடிவு நன்கு பொருந்தத் தகரமும், நாநுனி விரிந்து ஒற்ற நகரமும் தத்தம் இயல்பு தோன்ற இனிது பிறக்கும். |
மேற்பல்லின் அடிப்பகுதியில் நாவிரிந்து நன்கு பொருந்தாவிடின் உள்வளி சிறிதே வெளிப்படும். அவ்வழி இவை இடைமைத் தன்மை எய்துதற்கு ஏதுவாகுமாதலின் ‘‘பல்முதல் மருங்கின்’’ என்றும், ‘‘நாநுனி பரந்து’’ என்றும், ‘மெய்யுற’ என்றும், ‘ஒற்ற’ என்றும் விளங்கக் கூறினார். |
ஒவ்வொரு உறுப்பின் வடிவமும் அதனதன் நிலையில் இவ் எழுத்துக்கட்கு உடம்பாகலின் வடிவுகொள்ளும் நிலையை ‘‘மெய்’’ என்றார். மெய்உற்றும், நன்கு ஒற்றியும் நின்ற வழி அவ்எழுத்தின் தன்மை நன்கு புலனாதலின் ‘‘இனிது பிறக்கும்’’ என்றார். |