நாநுனி அண்பல்முதலை உற்றபின் அஃது அண்ணத்தை ஒற்றுதற்கும் வருடுதற்கும் இயையாதாகலின் ஒற்ற முயலும் நிலையை ‘‘உற’’ என்றார். அஃது விளக்குவர இருள் நீங்கிற்று என்பது போல நின்றது. |
சூ. 97: | இதழியைந்து பிறக்கும் பகார மகாரம் |
(15) |
க-து: | பகரமகரங்கட்கு வினைக்கள முயற்சி கூறுகின்றது. |
பொருள்:பகரம் மகரம் ஆகிய மெய்யெழுத்துக்கள் கீழிதழ் மேலிதழைப் பொருந்தப் பிறக்கும். செயவென் எச்சம் திரிந்து நின்றது. |
சூ. 98: | பல்லிதழ் இயைய வகாரம் பிறக்கும் |
(16) |
க-து: | வகரத்திற்கு வினைக்கள முயற்சி கூறுகின்றது. |
பொருள்:வகரமெய் மேற்பல்லின் முற்பகுதியைக் கீழ்இதழ்சிறிது மடங்கிச் சென்று பொருந்தப்பிறக்கும். |
பல்இதழ் எனப்பொதுவில் நின்றவேனும் ஏற்புழிக்கோடலான் மேற்பல், கீழிதழ் எனக்கொள்க . இதழ் சிறிது மடங்குதலும் அதனானே கொள்க. இம்மூன்றினையும் இதழ்வழி மெய் எழுத்தென்பர் மொழி நூலார். |
சூ. 99: | அண்ணம் சேர்ந்த மிடற்றெழு வளியிசை |
| கண்ணுற் றடைய யகாரம் பிறக்கும் |
(17) |
க-து : | எஞ்சிநின்ற யகரமெய்க்கு வினைக்கள முயற்சி கூறுகின்றது. |
பொருள்:யகரமெய், அண்ணத்தைச் சேர்ந்த, மிடற்றெழும் வளியிசையானது விளிம்புற்று நிற்கும் அடிநாவினை நெருங்கிப் பொருந்தப் பிறக்கும். |
அண்ணம் சேர்ந்த வளியிசை எனக்கூட்டுக. ‘‘மிடற்றெழுந்த’’ என்பது இனஞ்சுட்டி இயைபுநீக்கவந்த அடைமொழி. கண்ணுறுதல் = மிக நெருங்குதல். கண்ணுற்று அடைய என்பதற்கு அவாய்நிலையான், விளிம்புற்று நிற்கும் அடிநா என்பது செயப்படுபொருளாக வந்தது. |
மெய்யெழுத்துக்கள் செயலுறுப்புக்கள் தொழிற்பட்ட வழியல்லது பிறவாமையான், மிடற்றெழுவளியிசையான் மட்டும் பிறக்குமெனின் அஃது மேற்கோள் மலைவாம். வளியிசையான் மட்டுமே பிறப்பின் அஃது உயிரெழுத்தாவதல்லது மெய்யாகாதென அறிக. |