அவை, பட்டாங்கு புணர்தலும் திரிபுற்றுப் புணர்தலுமாகிய இருநிலைமைகளை எய்தும். திரிதல் ஒருசொல்லின் ஈற்றெழுத்தும் முதலெழுத்துமேயன்றி இடைநின்றனவும் திரியும். ஒரோவழி அச்சொல் முழுதும் திரிதலுமுண்டு. பிறிதோர் எழுத்தையோ சொல்லையோ துணைக் கொள்ளுதலும் உண்டு. அங்ஙனம் திரிதற்குக் காரணம் எழுத்துக்களின் பிறப்பிட வேறுபாடேயாகலின் பிறப்பியலின் பின் புணரியல் வைக்கப் பெற்றது. புணர்ச்சியை ஆசிரியர் இயற்கை, தொழில்,இயல்பு, பண்பு முதலிய சொற்களானும் குறிப்பிடுவார். |
மெய்யையும் உயிரையும், ஈறும் முதலுமாகக் கொண்டு சொற்கள் புணரும்நிலை மிகப் பரப்புடையதாகலின் அவ் இலக்கணத்தை ஆறு இயல்களாகப் பகுத்துக் கொண்டு ஓதுகின்றார். அவற்றுள், முதலாவதாகிய இப்புணரியல் ஏனைய ஐந்தற்கும் பொதுவாகும். இதன்கண் ஆசிரியர், புணர்ச்சி என்பதன் பொதுவிலக்கணத்தையும் நால்வகைச் சொற்களுள், தத்தம் பொருளவாய்நிகழும் இடைச் சொற்களும், உரிச்சொற்களும் பெயரும் வினையுமாக அடங்கலின் அவற்றைப் பெயர் வினைகளுள் அடக்கி, அவை புணரும் நிலைமைகளையும், வேற்றுமைப் பொருள்வயின் உருபாகுவன இடைச் சொற்களே யாதலின் அவை புணரும் இயல்பினையும், சொற்கள் அல்வழியும் வேற்றுமை வழியுமாகத் தொடர்வதனான் அல்வழி வேற்றுமை பற்றிய மரபுகளையும், பொருள் நிலைக்கு உதவுவனவாயும் |