நூன்மரபு143

நிறுத்தசொல்லை  நோக்கி   எதிர்ப்படும்     சொல்லைக்    ‘குறித்து
வருகிளவி’    என்பவாதலான்    புணர்ச்சி   என்பது  நிறுத்த சொல்லை
வைத்தே கூறப்படும் என்பது   விளங்க,   முதலும்   இறுதியும்  என்னாது
இறுதியும்    முதலும்    என்றார்.   புணர்ச்சிக்கண்     நிகழும்    திரிபு
வேறுபாடுகள்   உயிரெழுத்தினும்   மெய்யெழுத்துக்கள்   மாட்டு   மிக்கு
நிகழ்தலான் “மெய்யே உயிரென் றாயீ ரியல’’ என்றார்.
 

எ-டு:  கடல்  -  மெய்ம்முதல்    மெய்யீறு.   அலை  -  உயிர்முதல்
உயிரீறு;  இராஅ என்பதும்  அது. மணி - மெய்ம்முதல்  உயிரீறு;  நிலாஅ
என்பதும்   அது.  எழில் - உயிர்   முதல்   மெய்யீறு.   நுந்தை என்பது
மொழி  முதற்   குற்றியலுகரம்.   இதனை   இதழ் குவித்து முற்றுகரமாகக்
கூறின் மெய்ம்முதல் உயிர் ஈறாகும்.
 

சூ. 104:

அவற்றுள்

மெய்யீ றெல்லாம் புள்ளியொடு நிலையல்

(2)
 

க-து:

ஈறாக நிற்கும் மெய் ஒலிப்புடைய புள்ளியாகி நிற்குமென்கின்றது.
 

பொருள்:  “மெய்யே உயிரென் றாயீ ரியல’’ என்றவற்றுள் ஈற்றின்கண்
நிற்கும் எல்லா மெய்களும் ஒலிப்புடைய புள்ளி மெய்யாக நிற்கும்.
 

மொழிமரபின்கண் மெய்யெழுத்துக்கள் மொழிமுதற்கண்  உயிர்மெய்யாக
வன்றிப் புள்ளிமெய்யாக நில்லா  என நியமித்தமையான்  ஈற்றில்   நிற்கும்
மெய்,   புள்ளியொடு   நிற்குமென  ஈண்டுக்   கூறப்பட்டது.  ‘‘எல்லாம்’’
என்றதனான் இடை நிற்பனவும் புள்ளியொடு நிற்குமெனக் கொள்க.
 

எ-டு:  உரிஞ்,  அரண்,  வெரிந்,  மரம்,  அலவன், வாய், சுடர், கடல்,
தெவ், புகழ், உதள் எனவரும்.
 

சூ. 105:

குற்றிய லுகரமும் அற்றென மொழிப
(3)
 

க-து :

குற்றியலுகரத்தை மெய்யொடு மாட்டெறிந்து கூறுகின்றது.
 

பொருள்:சார்பெழுத்து மூன்றனுள்   மொழி   ஈற்றுக் குற்றியலுகரமும்
மேற்கூறிய  மெய்களின்  தன்மைத்தாகும்  என்றது:  புள்ளியொடு  நிற்கும்
என்றவாறு.
 

குற்றியலிகரமும்    ஆய்தமும்   மொழியிறுதிக்கண்    நில்லாமையின்
குற்றியலுகரத்தை    விதந்தோதினார்.    ‘மெய்யீ றெல்லாம்’    எனக்கூறி
மாட்டெறிந்தமையின்   ஈற்றுக்    குற்றியலுகரம்   என்பது  பெறப்பட்டது.
இதன்பயன் ‘புள்ளி யீற்றுமுன்’ என்னும் சூத்திரத்தான் இனிது விளங்கும்.