இனி, இவ்இரண்டு சூத்திரங்களானும் கூறப்பெற்ற விதிகள் மேலே, ‘‘மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல்’’, ‘‘இகர உகரத் தியற்கையு மற்றே’’ என்பவற்றான் பெறப்படுமால் எனின்? ஆண்டுக்கூறியது மெய்யும், குற்றியலிகரமும், குற்றியலுகரமும் அரை மாத்திரை பெற்று ஒலிக்கும் என அவற்றின் இலக்கணங் கூறப்பட்டது.ஈண்டுப் புணர்மொழிக்கண் நிலைமொழி ஈறாக நிற்குமிடத்துக் குறித்து வருகிளவி உயிர்முதன் மொழியாயின் புள்ளியியல்பாகிய மாத்திரையை இழந்து உயிரேற இடந்தந்தும் மெய்ம்முதல் மொழியாயின் இழவாமலும் நிற்குமென மேற்கூறும் ‘‘புள்ளி யீற்றுமுன் உயிர்தனித் தியலாது மெய்யொடும் சிவணும் அவ்வியல் கெடுத்தே’’ என்னும் விதிக்குக் கருவியாகக் கூறப்பெற்றமையான் கூறியது கூறலாகாமையறிக. |
சூ. 106: | உயிர்மெய் யீறும் உயிரீற் றியற்றே |
(4) |
க-து: | மொழியிறுதி நிற்கும் உயிர்மெய் உயிரீறாய் அடங்குமென்கின்றது. |
பொருள்:மொழியீற்றின்கண் நிற்கும் உயிர்மெய்யும் உயிரீற்றின் இயல்பினதாகும். என்றது: புணருமிடத்து உயிரீறு போலப் புணர்ச்சி விதி எய்தும் என்றவாறு. |
‘‘மெய்யே உயிரென் றாயீ ரியல’’ என்றதனான் கூட்டொலியாகிய உயிர்மெய் யாதனுள் அடங்கும்; என நின்ற ஐயம் நீங்க அஃது உயிரீறு போல நிற்கும் என்றார். மொழிமுதற்கண் நிற்கும் உயிர்மெய் மெய்ம்முதலாகும் என்பதனை ‘‘உயிர்மெய் யல்லன மொழிமுத லாகா’’ என மேற்கூறப்பட்டமையான் ஈண்டு ஈற்று உயிர்மெய்யை விதந்தோதினார். |
உயிர்மெய் என்பது மெய்யெழுத்தின் நிலை மூன்றனுள் ஒன்றாக நிற்கும் ஓரெழுத்தே எனினும் ஒலியமைப்பால் இருகூறு பட நிற்றலானும் புணர்ச்சி இலக்கணம் ஒலிபற்றி நிகழ்தலானும் வேற்றுமை நயம்பட ஒன்றையே முதலும் ஈறுமாகக் கொள்ளும் முறைமைபற்றி அதன் இயல்பு கூறப்பட்டதென்க. புணர்மொழிக்கண் ஓரெழுத்தையே ஒலிஅமைப்பு நோக்கிப் பிரித்துணர்த்தும் முறைமையைக் ‘‘குறியதன் இறுதிச் சினைகெட உகரம் அறிய வருதல் செய்யுளுள் உரித்தே’’ (உயிர்மய-32) என்னும் சூத்திரத்தானும் அறிக. |
இம்மூன்று நூற்பாக்களுக்கும் உரையாசிரியன்மார் கூறும் விளக்கங்கள் இந்நூல்நெறிக்கும் தமிழியல்பிற்கும் பொருந்தாமை மேலை ஓத்துக்களுள் விளக்கப்பட்டது. |