150மொழிமரபு

‘‘ஒழுக்கல்   வலிய’’     என்றார்.     எழுத்து     என்றது,    சாரியை
மொழிகளைப்போலப்         பொருள்வேறுபாட்டினைச்      செய்யாமல்
புணர்ச்சிக்குத்    துணைபுரியுமளவில்    நிற்கும். அது பொருள் வேறுபாடு
செய்யின் சாரியையாகுமென்க.
 

எ-டு:‘‘ஞகாரை   ஒற்றிய    தொழிற்பெயர் முன்னர்...உகரம் வருதல்
ஆவயி  னான’’  ‘‘நகர   இறுதியும்   அதனோ  ரற்றே’’  ‘‘வேற்றுமைக்கு
உக்கெட அகரம் நிலையும்’’ இவை எழுத்துப் பெறுதற்குரிய இலக்கணம்.
 

‘‘ஓகார இறுதிக்கு  ஒன்னே  சாரியை’’,  ‘‘ஞநவென் புள்ளிக்கு இன்னே
சாரியை’’,   ‘‘உயர்திணை   யாயின்   நம்மிடை    வருமே’’,   ‘‘திங்கள்
முன்வரின்    இக்கே   சாரியை’’  இவை மொழிபெறுதற்குரிய இலக்கணம்.
‘‘உயிரும் புள்ளியும் இறுதி யாகி....ஒத்த தென்ப ஏஎன்  சாரியை’’. இது தனி
எழுத்தாயினும் பொருள் வேறுபாடு செய்தலின் சாரியை என்ப.
 

சொற்கள் புணருங்கால் அவற்றின் பொருள்நிலை  இரண்டு என்பதனை
இச்சூத்திரத்தாற் பெறப்பட வைத்தார். இது “நுதலியறிதல்’’ என்னும்  உத்தி.
வேற்றுமைப் பொருளாவது: ஒரு பெயர்ப்பொருள் வேறுபடுதலைக்  காட்டும்
குறியீடாகிய உருபிடைச் சொற்கள் மறைந்து  தம்பொருளைப்  புலப்படுத்தி
நிற்றல். எனவே சொல்நோக்கத்தான் ஈண்டு வேற்றுமை என்பது வேற்றுமை
உணர்த்தும்   உருபுகளைச்   சுட்டி   நின்றது.   இதனை   ‘‘வேற்றுமைப்
பொருள்வயின் உருபா குநவும்’’ என்பார் ஆசிரியர்.
 

உருபுகள்   வெளிப்பட்டு   நின்று  புணரின்  அஃது உருபு  புணர்ச்சி
என்றும், வெளிப்படாது மறைந்து தம்பொருளைத்   தந்து   நிற்பின்  அது
வேற்றுமைப்   (பொருட்)    புணர்ச்சி    என்றும்    கூறுவர்.  இதனான்
வேற்றுமைப்   புணர்ச்சி     சொல்லமைப்பான்    இருவகைப்   படுதலை
அறியலாம். பெயர்ப்பொருள் எய்தும் வேற்றுமை    எட்டனுள்  தமக்கென
உருபுடையனவாய்ப்   பெயர்ப்பொருளை  வேறுபடுத்துவன ஆறேயாகலின்
எழுத்தியலுள் வேற்றுமைப் புணர்ச்சி என்பது   அவ்ஆறனையே  குறிக்கும்
என்பதை வருஞ்சூத்திரத்தான் ஓதுப.
 

இனி,    இச்சூத்திரத்து     முதலிரண்டடியினும்     உள்ள ‘‘பொருள்
மொழிநிலையும்’’   என்னும்    பாடம்      எவ்வகையாலோ   பிறழ்ந்து
‘‘புணர்மொழிநிலையும்’’    எனவுளது.   அதனைப் பிழையெனக் கருதாமல்
உரையாசிரியன்மார்   குழம்பித்    தடுமாறி   இயைபற்ற   விளக்கங்களை
இயம்பிச் சென்றனர்.