ஆசிரியர் அமைத்த பாடம் ‘‘பொருள் மொழிநிலை’’ என்பதேயாம். இதனை: ‘‘ணகார இறுதி வல்லெழுத் தியையின் டகார மாகும் வேற்றுமைப் பொருட்கே’’ (புள்ளி.7) ‘‘யகர இறுதி வேற்றுமைப் பொருள்வயின் வல்லெழுத் தியையின் அவ்வெழுத்து மிகுமே’’(புள்ளி.62) ‘‘லனஎன வரூஉம் புள்ளி யிறுதிமுன்.... வேற்றுமை குறித்த பொருள்வயி னான’’ (குற்றிய-75) ‘‘அச்சக் கிளவிக் கைந்தும் இரண்டும் எச்ச மிலவே பொருள்வயி னான’’ (வேற்.மய.17) எனப் பின்னர் எடுத்தாளுதலான் அறிக. |
அல்வழிப் பொருளாவது: அறுவகை வேற்றுமைப் பொருள்நிலை யல்லாத பிறவெல்லாம் என்க. அல்வழி என்பது வேற்றுமையல்லாதவழி என்னும் பொருளது. இஃது அஃறிணை என்பது போல்வதொரு மரபு. அவையாவன: எழுவாய்த்தொடர், விளித்தொடர், வினைமுற்றுத்தொடர், இருவகை எச்சங்களின் புணர்ச்சி, இடைச்சொற்றொடர், உரிச் சொற்றொடர், வேற்றுமைத் தொகை மொழியல்லாத பிற தொகை மொழிகள், அடுக்குத்தொடர் முதலியனவும் பிறவுமாம். |
எழுத்தே என்னும் ஏகாரம் எண்ணுப் பொருளது. ‘‘ஒழுகல் வலிய’’ என்பது எதுகை நோக்கிச் செய்யுள் விகாரமாய் ஒழுக்கல் வலிய என நின்றது. பிறவினைப் பொருள்பட நின்றது எனினும் அமையும். |
எ-டு :பண்ணுப்பெயர்த்து, - பொருநக் கடுமை - இவை வேற்றுமைப் புணர்ச்சியுள் எழுத்துப்பெற்றன. உரிஞுக்கடிது, பொருநுக்கடிது - இவை அல்வழிப் புணர்ச்சியுள் எழுத்துப் பெற்றன. மகவின்கை - வேற்றுமைப்புணர்ச்சியுள் சாரியை பெற்றது. பனையின் குறை (பனையும் குறையும்) அல்வழியுள் சாரியை பெற்றது. |
சூ. 113: | ஐஒடு குஇன் அதுகண் என்னும் |
| அவ்ஆறு என்ப வேற்றுமை உருபே |
(11) |
க-து : | வேற்றுமைப் பொருட்புணர்ச்சி கூறிய அதிகாரத்தான் அவற்றிற்குரிய உருபுகள் இவை எனக் கூறுகின்றது. |
பொருள்:ஐ, ஒடு, கு, இன், அது, கண் என்று கூறப்படும் அவ்வகை ஆறும் வேற்றுமை செய்யும் உருபுகள் எனக் கூறுவர் ஆசிரியர். |
சொல்லதிகாரத்து வேற்றுமை எட்டு எனக்கூறுதலின் ஈண்டு ஆறு எனக்கூறுதல் முரண் எனக் கருதற்க என்பார், ‘அவ்ஆறு என்ப வேற்றுமை உருபே’’ என்றார். புணர்மொழியிடத்துப் |