எ-டு:ஆனை (ஆ+இன்+ஐ=ஆனை) ஆவினை -ஆனொடு, ஆவினொடு எனவரும். ஆவின்முன் என்னாது ஆவின் இறுதி என்றதனான் நான்கனுருபிற்குக் கெடாது, ஆவிற்கு எனவும், ஆறனுருபிற்குக் கெட்டு, ஆனது எனவும் வருதல் சிறப்பாமெனக் கொள்க. உருபு புணர்ச்சிக்கு என விதந்து கூறாமல் பொதுப்படக் கூறியதனான் ஆன்கோடு, ஆவின்கோடு எனவரும் பொருட்புணர்ச்சிக்கும் இவ்விதிகொள்க. |
இனி, ‘‘இன்னின் இகரம் மாவின் இறுதி’’ எனவும் கொள்ளுமாறு சூத்திரம் யாத்தமையான் மா என்னும் பெயர்க்கும் இவ்விதி கொள்க. எ-டு : மானை-மாவினை எனவும் மானொடு - மாவினொடு எனவும் வரும். கெடலுமாம் என்னாது ‘உரித்துமாகும்’ என்றதனான் ஆனுக்கு, ஆவினுக்கு என உகரம் உடன் பெறுதலும் கொள்க. |
சூ. 121 : | அளவாகு மொழிமுதல் நிலைஇய உயிர்மிசை |
| னஃகான் றஃகான் ஆகிய நிலைத்தே |
(19) |
க-து : | இதுவுமது. |
பொருள் :அளவுப்பெயராய்வரும்,குறித்துவரு கிளவியின் முதல்நிற்கும் உயிரின் மேலிடத்ததாய் நிலைமொழியொடு நிற்கும் இன்சாரியையினது னகர ஒற்று றகரமாகிய நிலைத்தாகும். இத்திரிபு மயக்கநிலையானன்றி மரபுநிலையான் வருதலின் ‘‘ஆகியநிலைத்தே’’ என்றார். |
எ-டு :பத்து + இன் + அகல் = பதிற்றகல், பதிற்றுழக்கு எனவரும். இவை பண்புத்தொகை. அளவுப்பெயர் என்னாது அளவாகும் மொழி என்றதனான் எண்ணலளவைக்கண்ணும் இவ்விதிகொள்க. எ-டு:பதிற்றொன்று - பதிற்றிரண்டு எனவரும். இவை உம்மைத்தொகை. ‘‘நிலைஇய உயிர்மிசை’’ என்றதனான் அளவுப்பெயரல்லாத உயிர்முதன் மொழிக்கும் சிறுபான்மை இவ்விதிகொள்க. எ-டு: பதிற்றடுக்கு, ஒன்பதிற்றெழுத்து எனவரும். இவை பண்புத்தொகை. இச்சாரியையின் னகரம் குற்றொற்றாகலின் இரட்டியதெனக் கொள்க. இடைக்காலத்தார் இற்று என்பதையே சாரியையாகக் கொண்டனர். |
சூ. 122 : | வஃகான் மெய்கெடச் சுட்டுமுதல் ஐம்முன் |
| அஃகான் நிற்றல் ஆகிய பண்பே |
(20) |
க-து : | நிறுத்தமுறையானே ‘‘வற்று’’ என்னும் சாரியையினது இயல்பு கூறுகின்றது. ‘வஃகான் மெய்கட’ என்றதனான் வற்றுச்சாரியை என்பது பெறப்பட்டது. |