உலகம் உய்யும் பொருட்டு ஆலவாயிலமர்ந்து சிவபெருமானும், செவ்வேளும், திருமாலும் வளர்த்த தெய்வத் தமிழ், நாயன்மாராலும் ஆழ்வார்களாலும் மந்திரமாக வழங்கப் பெற்ற மறைமொழி, உலகமொழிகளுள் மூத்தது, என்றும் இளையது, இதன் இலக்கண முதல் நூலை இறைவனே படைத்தளித்தான் என்பது சான்றோர் கொள்கை. அந்த முதனூலின் வழிவந்த தொல்காப்பியம் காலத்தால் முந்தியது முழுமையானது என்பது கற்றோர் கருத்து. இந்நூலுக்குப் பல பெரியோர்கள் உரை எழுதியுள்ளனர். விளக்கங்களும் ஆராய்ச்சி உரைகளும் வந்து கொண்டுள்ளன. மெய்யறிவாளர்களின் நூல்கள் காலத்தைவென்று நிற்பன ஆதலால் காலந்தொறும் புதிய கருத்துக்கள் அவற்றுள் தோன்றிக் கொண்டே இருக்கும். அவ்வகையில் இப்பொழுது தொல்காப்பியத்திற்குப் புதியதொரு ஆராய்ச்சிக் காண்டிகையுரை பிறந்துள்ளது. |