164மொழிமரபு

என்பது   விதியாகலின்   இவை இக்குப் பெற்றன. ஐகார ஈறு இகரத்தொடு
ஓசை ஒற்றுமையுடையதாகலின் சாரியை விதி ஒத்ததாயிற்று.
 

இக்குச் சாரியை இடப்பொருட்டென்பார்   நச்சினார்க்கினியர்.  சித்திரை
முதலாய திங்களின்கண் நிகழும் விழா    முதலிய   சிறப்பு  நிகழ்ச்சிகளிற்
புரவலராயினர்  நல்கும் பரிசு முதலாயவற்றைக்     கோடல்  மரபாகலின்,
பொருட்டு என்னும் நான்காவதன் பொருளாகக் கோடலே சால்பாகும் என்க.
 

சூ. 128 :

எப்பெயர் முன்னரும் வல்லெழுத்து வருவழி

அக்கின் இறுதிமெய்ம் மிசையொடும் கெடுமே

குற்றிய லுகரம் முற்றத் தோன்றாது

(26)
 
க-து :

அக்குச்சாரியை திரியுமாறு கூறுகின்றது.
 

பொருள் :எவ்வகையாய பெயர்ச் சொற்களின் முன்னரும்,வல்லெழுத்து
வருமொழியாக வருமிடத்து, அக்குச்சாரியையின் இறுதி  நிற்கும்  ககரமெய்,
மேல்நின்ற  ககர ஒற்றொடும் கெடும்; இறுதி    நின்ற     குற்றியலுகரமும்
முற்றக்கெடும்.
 

எ-டு :தாழ் + அக்கு + கோல் =தாழக்கோல். தமிழ் + அக்கு + கூத்து =
தமிழக்கூத்து எனவும், ஈமக்குடம் கம்மக்குடம் எனவும்   வரும். தாழ்-தமிழ்
என்பவை பொருட்பெயர். ஈம் - கம் என்பவை  தொழிற்பெயர்,  ஆதலின்
எப்பெயர் முன்னரும் என்றார்.  தாழக்கோல்   என்பது   பண்புத்தொகை.
ஏனைய   வேற்றுமைத்தொகை.   தாழக்கோல்  வேறு, திறவுகோல் வேறு-
விளக்கம் பின்னர்ப் பெறப்படும்.
 

‘முற்ற’ என்பதை மிகையாக்கித் தமிழநூல், தமிழயாழ்,  தமிழவரசர் என
ஏனைக் கணத்தின் முன்னரும் இவ்விதி கொள்கஎன்பர் உரையாசிரியன்மார்.
தமிழ்நூல், தமிழ்யாப்பு, தமிழரசர்  என்றலே சால்புடைத்தாகலின் ஆசிரியர்
வல்லெழுத்து வருவழி  எனவிதந்தோதினார்.    பிறகணத்தின் முன்வருதல்
சான்றோர்  வழக்காயின் புறனடையாற் கோடலே தக்கது.
 

சூ. 129 :

அம்மின் இறுதி க ச த க் காலை

தன்மெய் திரிந்து ங ஞ ந ஆகும்

(27)
 
க-து :

அம்முச்சாரியை திரியுமாறு கூறுகின்றது.
 

பொருள் :அம்முச்சாரியையது    மகரஒற்றுக்   கசதக்கள் வருமொழி
முதலாக    வருமிடத்துத்   தன்னுருத் திரிந்து முறையே ங ஞ ந என்னும்
ஒற்றாகும்.