இவற்றை ஈண்டே மிகைபடுத்து அடக்குவர் உரையாளர். இன் சாரியை முழுதும் கெடுதலின் ‘‘அவற்றுள் இன்னின் இகரம்’’ என்னும் நூற்பாவின் பின் இதனை வையாது, உருபு வருங்கால் சாரியை வருதலும் வாராதிருத்தலும் உண்டென்னும் விதிகூறும் சூத்திரத்திற்கு முன் வைத்தார் என்க. |
சூ. 132 : | பெயருந் தொழிலும் பிரிந்தொருங் கிசைப்ப |
| வேற்றுமை உருபு நிலைபெறு வழியும் |
| தோற்றம் வேண்டாத் தொகுதிக் கண்ணும் |
| ஒட்டுதற் கொழுகிய வழக்கொடு சிவணிச் |
| சொற்சிதர் மருங்கின் வழிவந்து விளங்காது |
| இடைநின் றியலும் சாரியை இயற்கை |
| உடைமையும் இன்மையும் ஒருவயின் ஒக்கும் |
(31) |
க-து: | உருபு புணர்ச்சிக்கண்ணும் பொருட் புணர்ச்சிக்கண்ணும் இடைவருமென விதிக்கப்பெறும் சாரியைமொழிகளின்றி அப்புணர்மொழிகள் வாராவோ என்னும் ஐயம் நீங்க அவை ஒரோவழி வருதலும் வருதலின்மையும் ஒக்குமென இடைநின்றியலும் சாரியைகட்கு ஆவதொரு புறனடை கூறுகின்றது. |
பொருள் :பெயர்ச்சொல்லும் தொழிற்சொல்லும் தம்முள் பெயரும் வினையுமாக வேறுபட்டும், பெயரும் பெயருமாக ஒன்றுபட்டும், புணர்ந்து இசைக்குங்கால், வேற்றுமை உருபுகள் மறையாமல் நிலைபெறுமிடத்தும், அவ்வுருபுகள் தோன்றுதல் வேண்டாமல் அப்பொருள்படத் தொக்குவருமிடத்தும், நிறுத்த சொல்லும் குறித்து வருகிளவியும் இயைவதற்கேற்ப நடந்த இருவகை வழக்கொடு பொருந்தி, அப்புணர்மொழிகள் பிரிந்து நிற்குமிடத்துச் சொல்லின் ஈற்றினின்றியலும் சாரியைபோல,ஒன்றன் வழிவந்து தோன்றாமல் பொருள்நிலைக்குதவுவனவாய் அவற்றின் இடையே வந்து அவற்றை இணைப்பதற்கு இயலும் சாரியை மொழிகள், ஒரோவிடத்து வருதலுடைமையும், வருதலின்மையும் ஒக்கும் இயற்கையவாகும். இயற்கை = இலக்கணம். |
பெயருந்தொழிலும் இசைப்ப உருபுநிலை பெறுவழியும், தொகுதிக்கண்ணும், வழக்கொடு சிவணி,இடைநின்றியலும் சாரியை சொற்சிதர் மருங்கின் உடைமையும் இன்மையும் ஒக்கும் இயற்கை ஆம்-எனக் கூட்டிமுடிக்க. ‘சாரியை’ எழுவாய்;‘இயற்கை’ பெயர்ப்பயனிலை. ஒரோவயின் என்பது இசை கருதி ஒருவயின் என நின்றது. |
இச்சூத்திரத்தான் வழிவந்து விளங்கும் சாரியை, இடை நின்றியலும் சாரியை எனச் சாரியை இருவகைத்தாகும் என்பதும், உருபுதொக்குவரும் வேற்றுமைப்புணர்ச்சி வேற்றுமைப் பொருட்புணர்ச்சி ஆம் என்பதும் புலனாகும். |