முன்னர், ஒழுக்கல் வலிய (சூ-10) என்றது, ‘ஒட்டுதற்குரிய வழக்கு’ என ஈண்டு விளக்கினார். இடைநின்றியலும் என்பதைப் ‘‘புணரியல் நிலையிடைப் பொருள்நிலைக் குதநவும்’’ என இடைச்சொல்லோத்தினுள் கூறுவார். மான், கோஒன் என்றாற் போல்வன வழிவந்து விளங்கும் சாரியைகள். அக்கு, இக்கு, அத்து, வற்று என்றாற் போல்வன இடைநின்றியலும் சாரியைகளாம். | வேற்றுமைஉருபு நிலைபெறுவழியும் என்றது உருபு புணர்ச்சியை. தோற்றம் வேண்டாத்தொகுதி என்றது பொருட்புணர்ச்சியையாம். | எ-டு :ஆவைக் கொணர்ந்தான், ஆவினைக் கொணர்ந்தான்; பூவொடு மணந்த கூந்தல், பூவினொடு மணந்த கூந்தல்; சொற்குப் பொருள், சொல்லிற்குப் பொருள்; நெல்லது பொரி, நெல்லினது பொரி; தேர்க்கண் நின்றான், தேரின்கண் நின்றான்-எனவரும். இவை வேற்றுமை உருபு நிலைபெற்றவழிச் சாரியை உடைமையும் இன்மையும் ஒத்தன. | சாரியை பெற்றேவருவன வருமாறு: மரத்தை வெட்டினான், பலவற்றொடு முரணினான், கூழிற்குக் குற்றேவல் செய்தான்,ஆவினது கன்று,நிலாவின்கண் ஒளி எனவரும். | மகக்கை - மகவின்கை - மகத்துக்கை. மண்குடம் - மண்ணின் குடம் - மண்ணினாகிய குடம். கரும்புவேலி - கரும்பின் வேலி. பலாஅக்கோடு - பலாவின்கோடு - பலவின்கோடு. புறம் நின்றான் -புறத்தின்கண் நின்றான் எனவரும். இவை பொருட்புணர்ச்சிக்கண் சாரியை உடைமையும் இன்மையும் ஒத்தன. சாரியை பெற்றேவருவன வருமாறு: விண்ணத்துக்கொட்கும், வெயிலத்துச் சென்றான், ஆடிக்குக்கொண்டான், பரணியாற் கொண்டான் எனவரும். மலையின் வீழ்அருவி, மலையருவி என ஐந்தாம் வேற்றுமை விரிந்துவரினும் தொக்குவரினும் சாரியை பெறாதே வரும். | இனி,இந்நூற்பாவின் இறுதியடியின் பாடத்தை ‘‘உடைமையும் இன்மையும் ஒடுவயின் ஒக்கும்’’ எனக்கொண்டு ஒடு உருபின்கண் சாரியை வருதலும் வாராதாதலும் ஒக்கும் என உரைகூறினர் உரையாசிரியன்மார். அஃது ஆசிரியர் கருத்தாயின் முதல் ஐந்தடிகளும் வெற்றெனத் தொடுத்தலாய் முடியும், அன்றியும் அஃது உருபியலுள் ஓதப்படுவதன்றி ஈண்டைக்காகாது. மற்றும் மேற்கூறிய இலக்கண விதிகள் எல்லாம் பெறப்படாமல் |
|
|