168மொழிமரபு

குன்றக்கூறலாயும்   முடியுமென்க.    பொருட்புணர்ச்சிக்கண்ணும்  சாரியை
வரும்   என்னும்    இன்றியமையாத    இலக்கணம்      இந்நூற்பாவான்
பெறப்பட்டமை அறிக.
 

சூ. 133 :

அத்தே வற்றே ஆயிரு மொழிமேல்

ஒற்றுமெய் கெடுதல் தெற்றென் றற்றே

அவற்றுமுன் வரூஉம் வல்லெழுத்து மிகுமே

(31)
  
க-து :

அத்து, வற்று என்னும் சாரியைகளின் இயல்பு கூறுகின்றது.
 

பொருள் :அத்தும் வற்றுமாகிய இடைநின்றியலும் சாரியைகளின், மேல்
நிற்கும் புள்ளியீற்றுச்  சொற்களின்   இறுதி   ஒற்றாகிய   மெய்  கெடுதல்
தெளிவுடையது என்னும் தன்மைத்து. அவ்  இருசாரியைகளின்   முன்வரும்
வல்லெழுத்து மிகும். ‘அற்றே’ ‘மிகுமே’ என்பவற்றின் ஏகாரம் இசைநிறை.
 

எ-டு:கலம் + அத்து +  குறை = கலத்துக்குறை. அவ் + வற்று+ கோடு
=அவற்றுக்கோடு   எனவரும்.    அத்தினது    அகரம்   கெடுதற்கு விதி
மேற்கூறப்பட்டது.
 

புணர்மொழிக்கண்    நிகழும்     மூன்று   திரிபும் ஓரியல்பும் ஆகிய
இலக்கணம், பெயரும்     தொழிலுமாகிய  சொற்களுக்கேயாதலின் சாரியை
இடைச்சொற்களுக்கு  எய்தாதெனினும்,  இவ்  இருசாரியைகளும்  இடையே
வந்து நிறுத்தசொல்லை நோக்கி வருமொழி போலவும் குறித்துவருகிளவியை
நோக்கி நிலைமொழி போலவும் நின்று பெயர்,  வினைகளுக்கு  ஓதப்பெற்ற
விதிகளுக்கு ஒப்பப் புணர்தலைக் கருதித்   ‘‘தெற்றென்  றற்று’’   என்றார்.
அஃதாவது, பெயர் - வினைகள்   கொள்ளும் விதி தெளிவுடையது. இவை
போலவரும் இடைச்சொல்லும் அத்தன்மைத்து என்றவாறாம்.
 

இச்சூத்திரத்திற்கு   உரையாசிரியன்மார்  கூறும்    விளக்கம்  இந்நூல்
நெறிக்கும் மொழியியலுக்கும் ஒவ்வாமையை ஓர்ந்துணர்க.ஒற்றுமெய் என்றது
ஒலிப்புடைத்தாகிய மெய் என்றவாறு.
 

இனி,    உரையாசிரியன்மார்     ‘‘தெற்றென்றற்றே’’     என்றதனான்
விண்ணத்துக்கொட்கும்,     வெயிலத்துச்சென்றான்    என  அத்தின்மிசை
ஒற்றுக்கெடாமலும் விளவத்துக்கண், அதவத்துக்கனி என அத்தின்   அகரம்
அகரமுனைக் கெடாமலும் அண்ணாத்தேரி, திட்டாத்துக்குளம்  என ஆகார
ஈற்றின் முன் அத்தின் அகரம் கெட்டுவருதலும் கொள்க என்பர்.