நூன்மரபு171

பிளவுபடாது ஒன்றுபட்டுச் செல்லும் நிலையில் ஈறும்   முதலும்   திரிந்தும்
இயல்பாயும் கலக்கும்கலப்பு மயக்கம் என்பது தொல்லாசிரியர் மரபு. மற்றுப்,
புள்ளியில்லா மெய்யொடு  உயிரியையும் (உயிர்மெய்க்) கலப்பும், உயிரொடு
உயிர்தொடருங்கால் எய்தும் இயைபும் ஓசை இடையறவுபடாமல்  கூடுதலும்,
இடையறவுபட்டுப் பிரிந்து நிற்றலும்,   அல்வழியும்     வேற்றுமையுமாகிய
பொருள்    நோக்கமின்றி   இயற்கையாக நிகழ்தலின், அவை மயக்கமாகா
என்பதை    ஓர்ந்து   அவற்றை இவ்வியலின்கண்ணே வைத்து ஓதுவாராய்
இச்சூத்திரத்தான்    புள்ளியீற்றுமுன்   உயிர்  வருங்கால் அவை புணரும்
நிலையைக் கூறுகின்றார்.
 

பொருள்:நிறுத்தசொல்லின்    இறுதி   நிற்கும்   புள்ளி  எழுத்தின்
முன்,   குறித்துவரு    சொல்லின்    முதல்வரும்உயிர்  தான்  தனித்துப்
பிளவுபட்டிசைக்காமல் அரைமாத்திரை   ஒலிப்புடைத்தாய்   நிற்கும் புள்ளி
எழுத்தின் மாத்திரை இயல்பினைக் கெடுத்து (ஒலிப்பில்லாத) மெய்வடிவாக்கி
அதனொடு பொருந்தியிசைக்கும்.
 

எ-டு:நூலழகு,  பாலாறு,  ஆலிலை, அருளீகை, உயிருணர்வு, ஆரூர்,
பேரெழில், பொருளேற்றம், விரலைந்து, இறைவனொருவன்,   தேரோட்டம்,
புகழௌவியம் எனவரும்.
 

இதனை இவ்வியலுள் வைத்துக் கூறியவதனான் பெயரும் தொழிலுமாகிய
சொற்களேயன்றி    இடைச்சொல்,     உரிச்சொற்களுக்கும்    இவ்வியல்பு
கொள்ளப்படும்.  எ-டு : காணல்,   அருளு-உரிஞு, கேளா, எனவும், படரே
யுள்ளல், நாமநீர்வேலி, வாளொளியாகும், யாணுக்கவினாம் எனவும் வரும்.
 

புள்ளியீற்றொடு   குற்றியலுகரத்தை   முன்னர்   மாட்டெறிந்தமையின்,
குற்றியலுகர ஈற்றின்  முன்வரும்  உயிரும்   குற்றியலுகரத்தின்  மாத்திரை
இயல்பினைக் கெடுத்து அதனொடு பொருந்தி நிற்கும் எனக்கொள்க.
 

எ-டு :நாகழகிது-நாகழகு,      வரகரிசி,    தேக்கிலை,  கரும்பினிது,
மல்கிருள், எஃகொளி எனவரும். பிறவற்றொடும் ஒட்டிக்கொள்க.
 

விதியீறு,    இயல்பீறு    என விதவாமல் பொதுப்படக் கூறியவதனான்
அதனை, அதனொடு,    நாடுரி   என   விதியீற்றின் கண்ணும், கிளியழகு,
அலையெழுச்சி, விளவழகு, பலாவிலை என இயல்பீற்று உயிரின்  பின்வந்து
நிற்கும் உடம்படுமெய்யின் கண்ணும் இவ்விதி கொள்க. இவற்றை ‘ஒன்றென
முடித்தல்’   என்னும்     உத்தியாற்     கொள்வர்  உரையாசிரியன்மார்.
இந்நூற்பாவானே கொள்ளற்குத் தடை    ஏதுமின்மையான்  அவர் கருத்து
மிகையென அறிக. ‘‘மெய்உயிர்  நீங்கின் தன்னுரு  வாகும்’’ என ஆசிரியர்
பின்னர்க்  கூறலான்   இப்புணர்ச்சியை நீரொடு கூடிய பால்போல நின்றது
என நச்சினார்க்கினியர் கூறுவது பொருந்தாதென்க.