172மொழிமரபு
சூ. 139 :

மெய்உயிர் நீங்கின் தன்னுரு வாகும்

(37)
 
க-து :

மேற்கூறிய      புணர்மொழிகள்     பிரிந்து        நின்றவழி
நிலைமொழியீறு எய்தும் தன்மை கூறுகின்றது.
 

பொருள் :வருமொழி    உயிர்   சிவணுதற்பொருட்டுப் புள்ளியியல்பு
கெட்டு    மெய்யாகி    நின்ற   எழுத்துத் தன்னை ஊர்ந்த உயிர் பிரிந்த
வழி   (நிலைமொழிப்பொருள் சிதையாவாறு) தனது முன்னைய நிலையாகிய
புள்ளி உருவாகி நிற்கும்.
 

இவ்விரு     சூத்திரங்களையும்    வரி   வடிவு  நோக்கி உரைகண்ட
உரையாசிரியன்மார்    கருத்து,    இந்நூல்  நெறிக்கும்  மொழியியலுக்கும்
பொருந்தாமை நூன்மரபு உரையுள் விளக்கப்பட்டது.
 

உயிர்மயங்கியலுள்ளும்      புள்ளிமயங்கியலுள்ளும்   ஓரெழுத்தாகிய
உயிர்மெய்யெழுத்தினை     ஒலிக்கூறு    பற்றி    மெய்யும் உயிருமாகப்
பிரித்துப்  புணர்ச்சி   விதி  கூறுதற்கு    இவ்விரண்டு     நூற்பாக்களும்
கருவியாகும். உயிர்மெய்யெழுத்தின்கண் மெய்யெழுத்து    மாத்திரையிழந்து
நிற்றற்கும் இச்சூத்திரங்களே விதியாகும்.
  

சூ. 140 :

எல்லா மொழிக்கும் உயிர்வரு வழியே

உடம்படு மெய்யென் னுருபுகொளல் வரையார்

(38)
 
க-து :

உயிரீற்றின்   முன்    உயிர்   முதன்மொழி வருங்கால் எய்தும்
முறைமை கூறுகின்றது.
 

பொருள் :உயிரீறாகி  நிற்கும்  ஓரெழுத்தொருமொழி முதலாய எல்லா
மொழிக்கும்,    குறித்துவருகிளவி   உயிர்  முதலாகி வருமிடத்து இடையே
உடம்படுமெய் என்னும் ‘உருபு’ கோடலை நீக்கார் ஆசிரியர்.
 

மேல் புள்ளியீற்றின் முன் உயிர்வரின் எய்தும் நிலைமை கூறினமையான்
ஈண்டு    எல்லா    மொழிக்கும்   என்றது உயிரீற்று  மொழிகள் என்பது
உய்த்துணரப்படும். இயல்பீறும் விதியீறும்  அடங்க      எல்லாமொழிக்கும்
என்றார். இவ்விதியும் நால்வகைச் சொற்கும் பொது எனக்கொள்க.
 

இவ்உடம்படுமெய்கள் எழுத்தும் சாரியையும் போலப்  பொருள்நிலைக்கு
உதவவாராமல்     இரண்டு   உயிர்களை  இணைப்பதற்கு  ஆசாக வந்து
பொதுப்பட நிற்றலின், ‘‘உடம்படுமெய்’’ என வாளா கூறாமல்‘‘உடம்படுமெய்
என்னும் உருபு’’ என்றார். அவை யகரமெய்யும் வகரமெய்யுமாம் என்பதனை
ஆசிரியர்    உடம்பொடு    புணர்த்துக்    கூறுவதனானும்    சான்றோர்
செய்யுட்களானும் உணரலாம்.