இடமும் சார்புமாகிய குறிப்பான் அவை பொருள் உணர்த்தி நிற்குமாறும் கூறத்தொடங்கி, இச்சூத்திரத்தான் பொருட்புணர்ச்சிக்கண் புணர்மொழிகள் பல பொருள்பட நிற்குமாறு கூறுகின்றது. |
பொருள்:எழுத்துக்கள் வேறுபடாமல் ஒருங்கொத்து (வேற்றுமை உருபின்றித் தொக்கு) வந்து பொருளைத் தெரிவிக்கும் புணர்மொழிகள் பொருள் கொள்ளும் முறைமையான் வேறுவேறு படுதல் நிலைபெற்றதொரு இலக்கண மரபாகும். இசை என்றது பொருளை. |
எ-டு :யானைக்கோடு கூரிது;என்றவழிக் கிளத்தினோனது குறிப்பானும் இடமுதலிய சார்பானும் யானைக்குக் கோடுகூரிது, யானையது கோடுகூரிது, யானையின்கண் கோடுகூரிது, என முறையே கோடற்பொருளும், உடைமைப் பொருளும், இடப்பொருளுமாக வேறுபட விளங்கி நிற்கும். கரும்புவேலி என்புழிக் கரும்பாலாகிய வேலி, கரும்பிற்கு வேலி,கரும்பினதுவேலி எனவும் சொற்பொருள் என்புழிச் சொல்லானாகும் பொருள், சொல்லுக்குப் பொருள். சொல்லது பொருள், சொல்லின்கண் பொருள் எனவும் வருவனவெல்லாம் இசையாற்றிரிபுபட நிற்பனவாம். |
பொருட்புணர்ச்சி என்னாது ‘‘பொருள்தெரி புணர்ச்சி’’ என்றதனான், இசையிற்றிரிதலை வேற்றுமைத் தொகைக்கண்ணேயன்றி ஏனைத் தொகைமொழி, தொடர்மொழிக் கண்ணும் கொள்க. |
எ-டு :மலர்நோக்கம், என்புழி மலரை நோக்கிய நோக்கம், மலரான் நோக்கிய நோக்கம், மலருக்கு நோக்கம், மலரது நோக்கம், மலரின்கண் நோக்கம் எனவரும் வேற்றுமைப் பொருள்களேயன்றி மலராகிய நோக்கம்; மலர்ந்த நோக்கம், மலர்கின்ற நோக்கம், மலரும் நோக்கம்; மலர் ஒக்கும் நோக்கம்; மலர்நோக்கினை உடையாள் எனப் பண்புத்தொகை, வினைத்தொகை, உவமத்தொகை, அன்மொழித்தொகை ஆகிய தொகைப் பொருள்கள் விரிந்து இசையிற்றிரிந்து நிற்றலைக் கண்டுகொள்க. |
வேற்றுமைப்பொருள் மயங்குமாறு வேற்றுமை மயங்கியலுள் கூறுவார். ஈண்டு அவை எழுத்தான் வேறுபடாமல் நிற்கும் புணரியல் நிலை கூறினார் என்க. |
சூ. 142: | அவைதாம் |
| முன்னப் பொருள் புணர்ச்சி வாயில் |
| இன்ன என்னும் எழுத்துக்கட னிலவே |
(40) |
க-து: | மேற்கூறிய இசையிற்றிரியும் புணர்மொழிகள் எழுத்தோரன்னவாய் வரினும் அவை ஒருபொருளை வரைந்துணர்த்தற்குக் காரணம் கூறுகின்றது. |