தொகைமரபு:தொகுப்பாகக் கூறும் மரபு என்பது இதன் பொருள். ஈண்டுத் தொகுப்பாகக் கூறப்பெறும் புணர்ச்சி இலக்கணங்களைப் பற்றிய இயலை உணர்த்தி நிற்றலின், அன்மொழித்தொகையாம். தொகுத்துக் கூறப்பெறும் புணர்ச்சி இலக்கணங்களேயன்றி அவற்றிற்குரிய சில கருவிகளும், மரூஉ முடிபுகளும் பிறவும் கூறுதலின் இயல் என்னாது, மரபென்றார். |
இதன்பின் உயிர்மயங்கியல் முதலாய மூன்று இயல்களுள்ளும் உயிரீறும் புள்ளியீறும் குற்றியலுகர ஈறும் நிற்ப அவற்றொடு நாற்கணங்களும் இருவழியானும் புணருங்கால் எய்தும் விதிகள் கூறப் பெறுகின்றன. ஆண்டு நிறுத்தசொல்லின் உயிரீறும் புள்ளியீறும் ஒருங்கெய்தும் விதிகளைக் கூறற்கு ஏலாவாகலான் அவற்றைப் பற்றியும், இருவகை ஈறுகளும் புணருங்கால் சில ஒத்தவிதிகளைப் பெறுதலின் அவற்றைப் பற்றியும்,ஒரு சில ஈறுகளையுடைய சொற்கள் நிறுத்தசொல்லாகத் தோன்றாமை பற்றியும் சில ஈறுகள் வேற்றுமைப் புணர்ச்சியுள் மாறுபட்டும் அல்வழிப்புணர்ச்சியுள் ஒன்றுபட்டும் வருதலின் அவற்றைப் பற்றியும், வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண் பொதுவிதிக்கு மாறுபட்டு நிகழும் ஒருசார் வேற்றுமைப்புணர்ச்சி பற்றியும், அளவுப்பெயர்களின் முதல் எழுத்துக்கள் பற்றியும், மரூஉ முடிபு பற்றியும் நிகழும் மரபுகளையெல்லாம் தொகுத்துக் கூறலின் இவ்வியல்‘‘தொகை மரபு’’ என்னும் பெயருடையதாயிற்று. |