நூன்மரபு180

பொருள் :மேற்கூறியவற்றுள்  ணகரமும்  னகரமும் ஈறாய் நின்றவழி,
யாவென் எழுத்தும், ஞாவென்  எழுத்தும்  வருமொழி  வினைச்சொல்லின்
முதலாகவரின் அவை பொருளான் ஒத்த தன்மைய என்று கூறுவர் புலவர்.
 

இதன் கருத்தாவது: ணகர  னகர  ஈறுகளின்  முன் யகர முதன் மொழி
வினையாகவரின்    ஞகரமாகத்   திரிந்து உறழும் என்பதாகும். ஞான்றான்
என்பது யான்றான்   எனவாராமையின்   உறழ்தல் யகரத்திற்குரியதென்பது
உய்த்துணரப்படும்.
 

எ-டு :மண்யாத்தார்  -   பொன்யாத்தார்   என்பவை, மண்ஞாத்தார்
பொன்ஞாத்தார் எனவும் வரும்.
 

பிறப்பிடம்    ஒன்றற்கொன்று   அண்மைத்தாக  இருத்தலும் ஆவொடு
வருதலும்    இம்மயக்கத்திற்குக்    காரணமாம்.   இவ்வுறழ்ச்சி  விதியைச்
சூத்திரயாப்பின் சதுரப்பாடு  தோன்றப்  போலி  கூறுவார்  போல  யாத்த
நயத்தினை ஓர்க.
 

சூ. 147 :

மொழிமுத லாகும் எல்லா எழுத்தும்

வருவழி நின்ற ஆயிரு புள்ளியும்

வேற்றுமை யல்வழித் திரிபிட னிலவே

(5)
 
க-து :

ணகர னகர ஈறுகட்கு ஆவதோர் அல்வழி முடிபு கூறுகின்றது.
 

பொருள் :மொழிக்கு     முதலாகும்    எனப்பட்ட  இருபத்திரண்டு
எழுத்துக்களும்    வருமொழி   முதலாக வருமிடத்து,  ஈறாக நின்ற ணகர
னகரமென்ற    அவ்இரண்டு    எழுத்துக்களும்   வேற்றுமையல்லாதவழித்
திரியும்நிலை இலவாம்.
 

எ-டு:மண்கடிது - பொன்கடிது,சிறிது,தீது,பெரிது எனவும், ஞெகிழ்ந்தது,
நிறைந்தது, மலிந்தது எனவும், யாது, வலிது  எனவும்,  அழகிது,  ஆயிற்று,
இணைந்தது, ஈண்டிற்று, உலர்ந்தது, ஊறிற்று,  எளிது,  ஏறிற்று,  ஐதாயிற்று,
ஒத்தது,ஓங்கிற்று,   ஒளவையது   எனவும்  வரும்.   சாட்கோல்   என்பது
பண்புத்தொகையாகலின் அத்திரிபு  ஈண்டைக்கு   எய்தாது.  புறனடையில்
அடங்கும் என்க.
 

சூ. 148 :

வேற்றுமைக் கண்ணும் வல்லெழுத் தல்வழி

மேற்கூ றியற்கை ஆவயி னான

(6)
 
க-து :

மேற்கூறிய   அவ்இரண்டு  ஈறுகளும்  வேற்றுமைக்கண் இயல்பு
கணங்களொடு புணரும் இலக்கணம் கூறுகின்றது.