நூன்மரபு181

பொருள் :மேற்கூறிய   அவ்விரு  ஈறுகளும்  வேற்றுமைப்  பொருட்
புணர்ச்சிக்   கண்ணும்,    வருமொழி   வன்கணமல்லாதவழி   மேற்கூறிய
இயல்பினவாம். வல்லெழுத்தாயின்  திரியும்   என்பது  புள்ளிமயங்கியளுள்
கூறப்படும்.
 

எ-டு :மண், பொன் என நிறுத்தி - ஞெகிழ்ச்சி, நீட்சி, மாட்சி,  யாப்பு,
வன்மை எனவும், அழகு, ஆக்கம், இயல்பு,  ஈட்டம்,  உயர்ச்சி,   ஊட்டம்,
எழுச்சி, ஏற்றம், ஐது, ஒடுக்கம், ஓக்கம் எனக்கூட்டி   இயல்பாமாறு  கண்டு
கொள்க.
 

சூ. 149 :

லனவென வரூஉம் புள்ளி முன்னர்த்

தந எனவரின் றனவா கும்மே

(7)
 
க-து :

லகர   னகரங்களின்   முன்  தகர   நகரங்கள்     திரியுமென
வருமொழித்திரிபு கூறுகின்றது.
 

பொருள் :லகர  ஈறு  னகர  ஈறு   எனவரும் புள்ளியீறுகளின் முன்
தகரமுதல் நகர முதல் எனவரும் உயிர்மெய்கள்வரின் அவை முறையே றகர
னகர உயிர்மெய்யாகத்  திரியும்.   நிலைமொழித்திரிபு  புள்ளிமயங்கியலுள்
பெறப்படும்.
 

எ-டு:கஃறீது,   சொற்றிகழும்,    சொன்னன்று  எனவும்  பொன்றீது,
பொன்னன்று  எனவும்   வரும்.  இவை  அல்வழி. கற்றீமை, கன்னன்மை,
பொற்றீமை,   பொன்னன்மை   எனவும்  வரும். இவை வேற்றுமை. இவை
பொருள் நோக்கானன்றி மயக்க விதியின்மையான் திரிந்தன என அறிக.இது
வரும் சூத்திரத்திற்கும் ஒக்கும்.
 

சூ. 150 :

ணளவென் புள்ளிமுன் டணஎனத் தோன்றும்

(8)
 
க-து :

ணகர ளகரங்களில் முன் தகர நகரங்களின் திரிபு கூறுகின்றது.
 

பொருள் :ணள  என்று சொல்லப்பெறும்  புள்ளிகளின் முன் தகரமும்
நகரமும்   என்னும்   உயிர்மெய்வரின் அவை  திரிந்து முறையே டகரமும்
ணகரமுமாகத் தோன்றும். தகரநகரம் என்பது அதிகாரத்தான் வந்தது.
 

எ-டு:மண் + தீது =மண்டீது; மண் + நன்று =மண்ணன்று எனவும் முள்
+ தீது = முஃடீது; புள் + தேம்ப = புட்டேம்ப; முள் + நன்று = முண்ணன்று
என அல்வழிக்கண்ணும் மண்டீமை, மண்ணன்மை; முட்டீமை,முண்ணன்மை
என வேற்றுமைக்கண்ணும் வரும்.