நூன்மரபு183

இவற்றுள்  தகரத்தின்   முன்  ணனக்களும்   லளக்களும்  திரியுமாறு
அகத்தோத்தினுள் பெறப்படும்.
 

இனி  உறழ்ந்து   வருவன : நடகொற்றா - நடக்கொற்றா; கூகொற்றா -
கூக்கொற்றா    எனவும்    எய்கொற்றா  -   எய்க்கொற்றா;  ஈர்கொற்றா
- ஈர்க்கொற்றா; தாழ்கொற்றா - தாழ்க்கொற்றா எனவும் வரும்.
 

ஏற்புழிக்கோடல் என்பதனான் துக்கொற்றா, நொக்கொற்றா  என  இவை
மிக்கே   முடியுமெனக்    கொள்க.   எகர  ஒகரங்கள்   மிக்கு   முடிதல்
உயிர்மயங்கியலுட் கூறப்படும்.
 

இனி    நில்கொற்றா,     நிற்கொற்றா  எனத்திரிந்து  உறழ்வனவற்றை
‘‘உறழாகுநவும்’’      என்னும்    பொதுவகையான்   முடிக்க    என்பார்
நச்சினார்க்கினியர். நில்கொற்றா  என்பது   நில்லுகொற்றா    என  உகரம்
பெறுதலே பண்டை வழக்காம். நிற்கொற்றா என்பது பிற்கால வழக்காமென்க.
 

முன்னிலை     வினைகளுள்       தொழில்       உணர்த்துவனவும்
தொழிற்படுத்துவனவும்  எனச் சிறுவேறுபாடுடையன உளவேனும், ஆசிரியர்
இவற்றை முன்னிலைவினை என்றே  வழங்குவர்.   எனினும்   வியங்கோள்
வினையுள்     ஏவல்   கண்ணாதன  பலவும்  கண்ணுவன சிலவுமாம் என
உடம்பொடு   புணர்த்தி  ஆசிரியர்  கூறலான், தொழிற் படுத்துவனவற்றை
மட்டும் முன்னிலைவினை எனக் கூறுதல் இந்நூல் நெறிக்கு ஏலாதென்க.
 

முன்னிலைவினை மூன்று காலமும் பற்றி வரும்.ஏவல்வினை எதிர்காலம்
மட்டும் பற்றி வரும். இவையே இவை தம்முள் வேற்றுமையாம்.
 

சூ. 152 :

ஒளஎன வரூஉம் உயிரிறு சொல்லும்

ஞநம வென்னும் புள்ளி யிறுதியும்

குற்றிய லுகரத் திறுதியும் உளப்பட

முற்றத் தோன்றா முன்னிலை மொழிக்கே

(10)
 

‘‘ஞநமவ’’   என்னும்   புள்ளியிறுதியும்,  என்பது  உரையாசிரியன்மார்
கொண்டுள்ள பாடம். அது பிழையானது என்பது பின்னர்க் கூறப்பெறும்.
 

க-து :

மேற்கூறிய  முன்னிலை  வினையீறுகளுள் சிலவற்றிற்கு எய்தியது
விலக்கிக் குற்றியலுகரத்திற்கு எய்தாதது எய்துவிக்கின்றது.