நேர்ந்ததென்க. அதனை ஓராமல் உரையாசிரியன்மார் தெவ்வு கொற்றா என உதாரணந் தந்தனர். தெவ்வு கொற்றா என்பது கொற்றா! இது பகையாகும் எனப்பொருள் தருவதன்றித் தெவ்வுவாயாக!என ஏவற் பொருள் தாராதென்க. | இச்சூத்திரத்திற்கு வேங்கடராசுலு ரெட்டியார் கூறும் விளக்கங்கள் ஈண்டைக்கு வேண்டாதன என்க. | சூ. 153: | உயிரீ றாகிய உயர்திணைப் பெயரும் | | புள்ளி யிறுதி உயர்திணைப் பெயரும் | | எல்லா வழியும் இயல்பென மொழிப | (11) | க-து : | உயர்திணைப் பெயர்கள் இருவழியும் வன்கணத்தொடு புணருமாறு கூறுகின்றது. | பொருள் :உயிரெழுத்து ஈறாகிய உயர்திணைப் பெயர்களும், புள்ளி எழுத்து ஈறாகிய உயர்திணைப் பெயர்களும் அல்வழி, வேற்றுமை என்னும் எல்லா இடத்தும் திரிபின்றிப் புணரும் எனக் கூறுவர் ஆசிரியர். | உயர்திணைப் பெயரீறுகளாகச் சொல்லதிகாரத்துப் பெறப்படுவன இ, ஊ, ஐ, ன், ர், ள், ம் என்பனவாம். இவற்றுள் அகத்தோத்தினுள் விதந்து கூறப்பெற்றவை ஒழிந்த ஏனையவை ஈண்டுக் கொள்ளப்பெறும். | எ-டு:நம்பி, நங்கை, பெண்டாட்டி, அவன், அவள், அவர் என நிறுத்திக் குறியன், சிறியன், தீயன், பெரியன், குறியள், சிறியள், தீயள், பெரியள், குறியர், சிறியர், தீயர், பெரியர் எனக் கூட்டி அல்வழிக்கண் இயல்பாமாறும், அவற்றொடு கை, செவி, தலை, புறம் எனக் கூட்டி வேற்றுமைக்கண் இயல்பாமாறும் கண்டு கொள்க. இவற்றுள் தகரம்வர ளகரஈறு திரிதல் கருவித்திரிபென அறிக. | இனி, இருவழியும் என்னாது ‘‘எல்லாவழியும்’’ என்றதனான் உயர்திணை இயற்பெயராக வருவனவற்றுள் கபிலபரணர் எனவரும் ஒற்றுக் கேடும் குமரகோட்டம், குமரக்கோட்டம் எனவரும் உறழ்ச்சியும்,பார்ப்பாரப்பெண்டிர், வண்ணாரப்பெண்டிர் எனவரும் சாரியைப்பேற்றொடு கூடிய ஒற்று மிகுதியும், பலசான்றோர் என்பது பல்சான்றோர் எனவரும் இறுதியழிவும் சிறுபான்மையாக வருதல் கொள்க. இன்னும், இதனானே கொற்றமங்கலம், சாத்தமங்கலம், வேடமங்கலம் என உயர்திணைப் பொருட்டாய் வரும் இயற்பெயர் ஈறுகெடுதலும் கொள்க. |
|
|