நூன்மரபு186

ஆசிரியர்   ‘பெயர்’  என  விதந்து  கூறுதலின்  உயர்திணை வினைச்
சொற்கள்     இயல்பாயும்    திரிந்தும்     முடிவனவற்றை இம்மிகையாற்
கொள்கவென    நச்சினார்க்கினியர்    கூறுவது    ஏற்புடைத்தாகவில்லை.
அவற்றைப் புறனடையாற் கொள்ளத் தகும்.
 

சூ. 154 :

அவற்றுள்

இகர இறுபெயர் திரிபிட னுடைத்தே

(12)
 
க-து:

இகரஈற்றுயர்திணைப்  பெயர்க்கு  எய்தியதன்மேற்  சிறப்பு  விதி
கூறுகின்றது.
 

பொருள் :மேற்கூறிய        இருவகை    ஈறுகளுள் இகரத்தானிற்ற
உயர்திணைப்பெயர்  திரியுமிட முடையதாகும்.   இடம்   என்றது   ஈண்டு
வேற்றுமை வழியைக் குறிப்பாலுணர்த்தி நின்றது.
 

எ-டு:நம்பிப்பேறு  எனவரும். இடனுடைத்து என்றதனான் ஏனாதிப்பூ,
காவிதிப்பூ எனச் சிறப்புப் பெயர்க்கண் மிகுதலும்,உரையிற்கோடல் என்னும்
உத்தியான் நங்கைக்காடு, நங்கைப்பேறு என ஐகார ஈற்றுப்பெயர் மிகுதலும்
கொள்க. நம்பிக்கொல்லன்,  செட்டிக்கூத்தன், நங்கைப்பெண் எனப் பண்புத்
தொகைக்கண் மிகுதலைப் புறனடையாற் கொள்க.
 

சூ. 155 :

அஃறிணை விரவுப்பெயர் இயல்புமா ருளவே

(13)
 
க-து :

ஒருசார் விரவுப் பெயர்களின் தன்மை கூறுகின்றது.
 

பொருள்:அஃறிணைப்பொருள்     கருதிவரும்     விரவுப்பெயர்கள்
இயல்பாதலும்    உளவாம்.   உம்மையான்  திரிந்து வருதலும் உளவெனக்
கொள்க.
 

ஒவ்வொரு   திணையுள்ளும்  பால்பற்றியும்  எண்ணுப்பற்றியும் விரவுப்
பெயர்கள்  உளவாதலின்  அஃறிணைப்பொருட்டாய் வரும் விரவுப்  பெயர்
என்பது விளங்க “அஃறிணை விரவுப் பெயர்’’ என்றார். இனிச்    சாத்தன்,
சாத்தி, கோதை; தாய், தந்தை; மகன்,  மகள்  என  இயற்பெயர்   முதலாக
முறைப்பெயரீறாக வரும் விரவுப் பெயர்களுள்  அகத்தோத்தினுள்  விதந்து
கூறப்பெற்றவை ஒழிந்த ஏனையவற்றை ஈண்டுக் கொள்க.
 

எ-டு:சாத்தன், சாத்தி, தந்தை என நிறுத்தி; கண்டது,சென்றது, தக்கது,
பார்த்தது     என   அல்வழிக்கண்ணும் கை,  செவி,  தலை,  புறம் என
வேற்றுமைக்கண்ணும் இயல்பாதல் கண்டுகொள்க. உம்மையான்  சாத்திப்புல்,
கொற்றிக்கோடு என வேற்றுமைக்கண் மிக்குவருதல் கொள்க.