நூன்மரபு191

எ-டு:பருத்தி குறிது, சிறிது, தீது, பெரிது எனவும் ஆரை குறிது, சிறிது,
தீது, பெரிது எனவும் வரும். இவை இயல்பு. புலிக்கொற்றன்,தாமரைக்கண்ணி
என வரும். இவை மிகுதி.
 

எழுவாய்த்தொடர்கள்   பெரும்பான்மையும்  இயல்பாயும்  சிறுபான்மை
உறழ்ந்தும் வரும். உவமத்தொகை,இருபெயரொட்டுப் பண்புத்தொகை இவை
பெரும்பான்மையும் மிக்குவரும்.
 

இடைச்சொல்லும்    உரிச்சொல்லும்   பெயர்   வினைகளைச்  சார்ந்து
பெயராயும்   வினையாயும்  நிற்குமாகலானும்,அவை   தம்மை   உணர்த்தி
நின்றவழிப்    பெயர்ப்பொருட்டாம்   ஆகலானும்  இவ்விதி அவற்றிற்கும்
ஒக்கும்.
 

எ-டு :தில்லைச்சொல்,    மன்னைச்சொல்  எனவரும்.  இவை இடைச்
சொற்கள், மிக்குவந்தன. சென்மதிபாக -இவ்இடைச்சொல் இயல்பாக நின்றது.
கடிகா - உரிச்சொல். இயல்பாக நின்றது.பணைத்தோள் - உரிச்சொல் மிக்கு
நின்றது. பிறவும் இவ்வாறே மரபு நோக்கி அறிந்து கொள்க.
 

சூ. 159:

சுட்டுமுத லாகிய இகர இறுதியும்

எகரமுதல் வினாவின் இகர இறுதியும்

சுட்டுச்சினை நீடிய ஐயென் இறுதியும்

யாவென் வினாவின் ஐயென் இறுதியும்

வல்லெழுத்து மிகுநவும் உறழா குநவும்

சொல்லிய மருங்கின் உளவென மொழிப

(17)
 
க-து :

சுட்டு,    வினா    இவற்றின்      அடிப்படையிற்      பிறந்த
இடப்பெயர்கட்காகும் விதி கூறுகின்றது.
 

பொருள்:சுட்டெழுத்தினை    முதலாகக்    கொண்ட  இகர  ஈற்றுச்
சொற்களும், எகரத்தை முதலாகக் கொண்ட இகரஈற்று  வினாச்  சொல்லும்
சுட்டெழுத்தாகிய உறுப்பு நீண்ட ஐகாரஈற்றுச்  சொற்களும்,   யாவென்னும்
வினாவை முதலாக உடைய ஐகார ஈற்றுச்  சொல்லும்,  மேலே இகர ஐகார
ஈற்றுக்குச் சொல்லியாங்கு  வல்லெழுத்து  மிக்கு   வருவனவும்   உறழ்ந்து
வருவனவும் உள என்று கூறுவர் ஆசிரியர்.
 

‘‘சொல்லிய’’   என்றது   மேலைச்  சூத்திரத்தும்  அகத்தோத்துள்ளும்
கூறப்பெற்ற   இலக்கணங்களை.   அகத்தோத்தினுள்      சுட்டுப்பெயரும்
வினாப்பெயரும்   நாற்கணத்தொடும்  புணருமாறு  கூறப்பெற்றது.  ஈண்டுச்
சுட்டு,  வினாக்களை  முதலாக உடைய இடப்பெயர்களைத் தொகுத்து விதி
கூறுகின்றது.