எ-டு:1. அதோளிக் கொண்டான், இதோளிக் கொண்டான், உதோளிக் கொண்டான், எதோளிக்கொண்டான், சென்றான், தந்தான், போயினான் என இவை மிக்குவந்தன. ஆண்டைக் கொண்டான், ஈண்டைக் கொண்டான் என இவை மிக்கு வந்தன. ஊண்டை, யாண்டை என்பனவற்றொடும் இவ்வாறே ஒட்டிக்கொள்க. | 2. அவ்வுழி கொண்டான், அவ்வுழிக் கொண்டான் என இவை உறழ்ந்து வந்தன. இவ்வுழி, உவ்வுழி என்பனவற்றொடும் ஒட்டிக் கொள்க. | இனிச் சுட்டுச் சினை நீடிய ஐயென் இறுதிக்கு ஆங்கை, ஈங்கை,ஊங்கை என்றும், யாவென் வினாவின் ஐயென் இறுதிக்கு யாங்கை என்றும் சொற்கள் வழங்கியிருத்தல் வேண்டும். என்னை? ஆங்கு, யாங்கு என்னும் குற்றுகர ஈற்று இடப்பெயர்கள் உண்மையான். ஆண்டு,யாண்டு என்பவை ஆண்டை, யாண்டை என வந்தாற்போல அவை ஆங்கை, யாங்கை என வருதற்கு ஏற்குமாதலின் என்க. | மற்று ‘‘இனியணி என்னும் காலமும் இடனும்’’ எனவும் ‘அன்றி யனைத்தும் பெயர்ப்பய னிலையே’ எனவும் ஆசிரியர் கூறுதலான்.அனி, இனி, உனி எனவும் அன்றி, இன்றி, உன்றி எனவும் சுட்டு முதலாகிய இகர ஈற்றுச் சொற்கள் அருகிய வழக்காக ஆசிரியர் காலத்து வழங்கியிருக்கக் கூடும். எனினும் பின்னவை சுட்டுப் பொருளின்றி இடப்பொருளில் வழங்காமை ஐயத்திற்கிடனாக உளது. | சூ. 160 : | நெடியதன் முன்னர் ஒற்றுமெய் கெடுதலும் | | குறியதன் முன்னர்த் தன்னுருபு இரட்டலும் | | அறியத் தோன்றிய நெறியிய லென்ப | (18) | க-து : | ஒற்றீறுகள் பற்றியதொரு பொதுவியல்பு கூறுகின்றது. | பொருள் :நெட்டெழுத்தின் முன்னிற்கும் ஒற்றுக்கெடுதலும், குற்றெழுத்தின் முன்னிற்கும் ஒற்றுத் தன்வடிவு இரட்டுதலும், யாவரும் அறியுமாறு வந்த நெறிப்பட்ட இலக்கணமென்று கூறுவர் நூலோர். | நெடியதன் முன்னர்க்கெடுதல் லகர, ளகர, ணகர, னகரமாகிய புள்ளி எழுத்துக்கள் என்பதும், அவை வருமொழி முதலாகத் தகர நகரங்கள் வருமிடத்தென்பதும், அவ்வாறே நெடியதன் முன்னிற்கும் மகரப் புள்ளி வருமொழி மெல்லெழுத்து |
|
|