| வரும். தாம், நாம் என்னும் பெயர்களே புணர்மொழிக்கண் தம், நம் எனச் சாரியை இடைச்சொல்லாகி வருதலின் அவற்றிற்கும் இவ்விதி ஒக்கும்.எ-டு: எல்லார் தமதும், எல்லார் தமக்கும்; எல்லா நமதும், எல்லா நமக்கும் எனவரும். | சூ. 162 : | நும்மென் இறுதியும் அந்நிலை திரியாது | (20) | க-து : | நும் என்னும் பெயர்க்கு அவ்விதியை எய்துவிக்கின்றது. | பொருள்:நும் என்னும் முன்னிலைப்பன்மைப் பெயரிறுதியும் மேற்கூறிய இலக்கணத்தின் மாறுபடாது. | எ-டு: நுமது, நுமக்கு எனவரும். நும் என்பது சாரியையாக வருதற்கண்ணும் இவ்விதி கொள்க. அது எல்லீர் நுமதும், எல்லீர் நுமக்கும் எனவரும். | இவ்இரு சூத்திரங்களிற் கூறப்பெற்ற சொற்களின்முன் ஏனை உயிர் முதலாகிய உருபுகள்வரின் பொது விதிப்படி நிலைமொழி ஒற்று இரட்டுமென அறிக. எ-டு: என்னை, எம்மை, என்னொடு, எம்மொடு, என்னின், எம்மின், என்னான், எம்மான், என்னுள், எம்முள், நும்மை, நும்மொடு எனவரும். பிறவும் அன்ன. | சூ. 163 : | உகரமொடு புணரும் புள்ளி யிறுதி | | யகரமும் உயிரும் வருவழி இயற்கை | (21) | க-து : | சாரியை உகர எழுத்துப் பெறும் ஒருசார் புள்ளியீறுகளுக்கு ஒருவழி எய்தியது விலக்குகின்றது. | பொருள்:அகத்தோத்தினுள் உகரம்பெற்று வருமொழியொடு புணரும் எனப் பெற்ற தொழிற்பெயர், அஃறிணைப்பெயர், பெயர்ப் பொருட்டாய் வரும் வகர ஈற்று உரிச்சொல் ஆகியவற்றின் புள்ளியீறுகள் வருமொழி முதலாக யகரமும் உயிரும் வருமிடத்து உகரம்பெறாது இயல்பாகப் புணரும். | அவ் ஈறுகளாவன : ஞ், ண், ந், ம், ல், ள், ன், வ் என்பவையாம்.உரிஞ், முரண், பொருந், திரும், முரல், அருள், தின் என்பவை முதனிலைத் தொழிற்பெயர். வெரிந், உரும், நெல், புள், மின் என்பவை அஃறிணைப் பெயர். தெவ் என்பது உரிச்சொல் பெயர்ப்பொருட்டு. இவற்றை நிலைமொழியாக நிறுத்தி யாது, அழகு,ஆவது, இனிது, ஈது, உகந்தது, ஊறு, எளிது, ஏற்றது, ஐது, ஒக்கும்,ஓங்கியது, ஒளவியத்தது எனப் பொருந்துமாறு கூட்டி இயல்பாமாறு கண்டு கொள்க. |
|
|