நூன்மரபு199

பொருள் :உயர்திணைப்   பல்லோரறியுஞ்   சொல்முன் வரும் யாவர்
என்னும் வினாப்பெயரின் இடையே உள்ள  வகர   உயிர்மெய் கெடுதலும்,
அஃறிணை ஒன்றறி சொல்முன்  வரும்   யாது   என்னும் வினாப்பெயரின்
இடையே ஒன்றிய வகர உயிர்மெய்   தோன்றி வருதலும், ஆகிய இரண்டும்
மரூஉ மொழிகளின் பாங்காகிப் பயின்று திரியும்.
 

எ-டு:அவர்   யார்,   மாந்தர்  யார், அந்தணர்  யார் எனவும் அது
யாவது   எனவும்   வரும். இவை இரண்டும் இலக்கணத்தொடு பொருந்திய
மரூஉவாகும்.
 

யாவர்   என்னும்   வினாப்பெயரின்  மரூஉவாகிய ‘யார்’ என்பதற்கும்
வினாவினைக்    குறிப்புச்சொல்லாகிய   ‘யார்’   என்பதற்கும் வேற்றுமை
யாதெனின்? இம்மரூஉப் பெயர் பல்லோரறியும் சொல்லைச் சார்ந்து  வரும்.
உருபேற்கும். வினைக்குறிப்புச் சொல் ஆடூஉ, மகடூஉ,பல்லோரறியும் சொல்
மூன்றன் பின்னரும் வினாப்பயனிலையாக வரும். உருபேலாது.
 

‘ஒன்றியவகரம்’ என்றதனான் ‘‘யாவதும் உணரார்’ என நிலைமொழியாக
வருமிடத்தும் வகரம் பெறுதலும், ‘‘திரியுமன்’’     என்றதனான்   திரியாது
இயல்பாய்    வருதலும்   ‘பயின்று’    என்றதனான்   யாவர் அவர் என
நிலைமொழியாக     நிற்றலும்   கொள்க.  இன்னும் அதனானே இலக்கண
நெறியான் வரும் மரூஉச் சொற்களை எல்லாம் இதுவே  நிலைக் களனாகக்
கொண்டு அமைத்துக் கொள்க.
  

தொகைமரபு முற்றியது.
 

6. உருபியல்
 

ஐ    முதல்   கண்  ஈறாகிய  ஆறு  உருபுகளும்  எல்லா வகையான
பெயர்களொடும்  இணையும்  இலக்கண நெறி பற்றி உணர்த்துதலின் இஃது
உருபியல் என்னும் பெயர்த்தாயிற்று.
 

பெயர்ப்பொருள்  வேறுபட்டமையை உணர்த்தும் உருபிடைச் சொற்கள்,
பெயர்ச்சொல்லும் தொழிற் சொல்லும் போலக் குறித்து   வருகிளவியாகாமல்
பெயர்க்கு ஈறாக அதனொடு புணர்ந்து நின்று   மேல்வரும்  சொற்களொடு
தொடர்ந்து முடிவனவாதலின் உருபு   புணரியல்    என்னாது   உருபியல்
என்றார்.