நால்வகைச் சொற்களும் பெயரும் தொழிலுமாக நின்று புணருமெனவும் அவற்றுவழி மருங்கிற் சாரியை வரும் எனவும் புணரியலுள் கூறிச் சாரியைகள் இடைச்சொற்களாதலின் அவை பெயரொடும் தொழிலொடும் இணைந்து வரும் புணர்ச்சி நிலையை அதன்கண் அமைத்தோதினார். அவ்வாறே வேற்றுமை உருபுகளும் இடைச்சொற்களாதலின் அவை பெயரொடு புணரும் புணர்நிலையைத் தனி ஓரியலாக அமைத்துக் கூறுகின்றார். |
உருபுகள் பெயரொடு கூடியபின் இரண்டும் ஒருசொல் நீர்மைத்தாய் நிறுத்த சொல்லாக அமைந்து குறித்துவருகிளவியொடு புணரும். அங்ஙனம் உருபொடு கூடி உயிரீறாகவும் புள்ளியீறாகவும் குற்றியலுகர ஈறாகவும் நிற்கும் பெயர்கள்,உயிர்மயங்கியல் முதலாய அகத்தோத்தினுள் கூறப்பெறும் விதிகளைப் பெற்றுக் குறித்து வருகிளவியொடு புணரும் என்க. |
இங்ஙனம் நூலாசிரியர் அமைத்துக் கூறும் இலக்கணநெறியை ஊன்றி உணராமல் உரையாசிரியன்மார் உருபின் பின் நிகழும் செய்கைகளையெல்லாம் மிகையானும் இலேசானும் உத்தியானும் அடக்க முற்பட்டு இடர்ப்படுவாராயினார். இடைக்கால நூலோர் உருபுகளைக் குறித்து வருகிளவியாகவே கருதி உருபு புணரியல் எனப் பிழைபடக் கூறிச் சென்றனர். |
இனி, நச்சினார்க்கினியர் மேல் தொகுத்துப் புணர்த்ததனை ஈண்டு விரித்துப் புணர்க்கின்றார். ஆகலின் இது தொகைமரபோடு இயைபுடைத்தாயிற்றென்பார். அவர் கருத்துத் தெளிவாகவில்லை. |
சூ. 173 : | அஆ உஊ ஏஒள என்னும் |
| அப்பா லாறன் நிலைமொழி முன்னர் |
| வேற்றுமை உருபிற்கு இன்னே சாரியை |
(1) |
க-து : | ஒருசார் உயிரீற்றுப் பெயர்கள்முன் உருபுகள் புணருமாறு கூறுகின்றது. |
பொருள் :அ ஆ உ ஊ ஏ ஒள என்னும் அக்கூற்று ஆறு ஈறுகளை உடைய சொற்களின் முன்வரும் வேற்றுமை உருபுகட்கு இடையே வருவது இன்சாரியையாம். ஏகாரம் இசைநிறை. |
எ-டு:விளவினை, விளவினொடு, விளவிற்கு, விளவினது, விளவிண்கண் எனவும் பலாவினை, கடுவினை, தழூவினை, சேவினை, வௌவினை எனவும் வரும். இவ்வாறே ஏனைய உருபுகளொடும் ஈறுகளொடும் கூட்டிக் கண்டு கொள்க. |