தழூ-வௌ என்பவை தொழிற் பெயர்கள். அவற்றைத் தழுவினைச் செய்தான் (தழுவுதலைச் செய்தான்), வௌவினைச் செய்தான் என வினையொடு கூட்டிக் கண்டு கொள்க. பின்வரும் தொழிற் பெயர்கட்கும் இவ்விளக்கம் ஒக்கும். “இன்னென வரூஉம் வேற்றுமை உருபிற்கு இன்னென் சாரியை இன்மை வேண்டும்” (புணரி-29) என்பதனான் ஐந்தாம் உருபு சாரியை பெறாது. விளவின் நீங்கினான், பலாவின் நீங்கினான் எனவரும். ஏனைய ஈறுகளொடும் இவ்வாறே ஒட்டிக் கண்டு கொள்க. |
சூ. 174: | பல்லவை நுதலிய அகர இறுபெயர் |
| வற்றொடு சிவணல் எச்ச மின்றே |
(2) |
க-து : | ஒருசார் அகர ஈற்றுப் பெயர்களுக்குச் சிறப்புவிதி கூறுகின்றது. |
பொருள்:பன்மைப் பொருளைச் சுட்டிவரும் அகர ஈற்றுப் பெயர்களின் முன்வரும் உருபு, வற்றென்னும் சாரியையொடு பொருந்தி வருதல் ஒழிதலின்று. ஏகாரம் ஈற்றசை. |
எ-டு:பல்லவற்றை, பல்லவற்றொடு, பல்லவற்றுக்கு, பல்லவற்றின், பல்லவற்றது, பல்லவற்றுக்கண் எனவரும். பல, சில, உள, உள்ள, பிற என்பவற்றொடும், உண்ப, தின்ப, கரிய, பெரிய, பொன்னன்ன என்பவற்றொடும் இவ்வாறே ஒட்டிக் கண்டுகொள்க. |
‘‘பல்லவை” என உடம்பொடு புணர்த்திக் கூறினமையின் சிறுபான்மை சாரியை இன்றி வருதலும் கொள்க. ‘‘எச்சமின்று ’’ என்பதனான் பலவற்றிற்கு, பலவற்றின்கண் என நான்கும் ஏழும் வற்றொடு இன்சாரியை பெற்று ஒருங்கு வருதலும் கொள்க. இனி வருவனவற்றிற்கும் ஈதொக்கும். |
சூ. 175 : | யாவென் வினாவும் ஆயியல் திரியாது |
(3) |
க-து : | ‘யா’ வென்னும் வினாப் பெயர்க்கும் அவ்விதி ஒக்கும் என்கின்றது. |
பொருள்:யா என்னும் ஓரெழுத்தொரு மொழியாகிய ஆகார ஈற்று வினாப்பெயரும் அவ்விலக்கணத்திற்றிரியாது வரும். |
எ-டு:யாவற்றை, யாவற்றொடு, யாவற்றுக்கு, யாவற்றின், யாவற்றது, யாவற்றுக்கண் எனவரும். இப்பெயர் சாரியை இன்றிவரின் பொருள் கவர்க்கும் ஆதலின் ‘திரியாது’ என வலியுறுத்தப் பெற்றதென்க. |