நூன்மரபு204

குறுகுவது  பெயர்   அன்று. எழுத்தே என்பது உணர நெடுமுதல் குறுகும்
என்றார். அங்ஙனம்  தோன்றிய  ஒற்றொடு   உருபு   பொருந்திப்புணரும்
என்பது கருத்து.
 

எ-டு:நின்னை, நின்னொடு,   நினக்கு,   நின்னின்,   நினது, நின்கண்
எனவரும்.
 

சூ. 180 :

ஓகார இறுதிக்கு ஒன்னே சாரியை

(8)
 
க-து :

ஓகார ஈற்றுச் சொல்லொடு உருபு புணருமாறு கூறுகின்றது.
 

பொருள் :ஓகார  ஈற்றுச்  சொல்லிறுதியொடு உருபு புணருங்கால் ஒன்
என்பது சாரியையாகவரும். ஏகாரம் இசைநிறை.
 

எ-டு:கோஒனை,  கோஒனொடு,  கோஒற்கு எனவரும். பிறவற்றொடும்
ஒட்டிக் கொள்க. இதனை அளபெடை போல இசைத்தல் வேண்டும்.
 

சூ. 181:

அஆ என்னும் மரப்பெயர்க் கிளவிக்கு

அத்தொடும் சிவணும் ஏழ னுருபே

(9)
 
க-து :

அகர  ஆகார  ஈற்று மரப்பெயர்க்கு முன்வரும் ஏழனுருப்பிற்குச்
சிறப்பு விதி கூறுகின்றது.
 

பொருள் :அகரம்   ஆகாரம் என்னும் எழுத்துக்களை ஈறாக உடைய
மரப்பெயர்ச்   சொற்களுக்கு  முன்வரும் ஏழனுருபு இன் சாரியையேயன்றி
அத்துச்சாரியையொடும் பொருந்தி வரும்.
 

எ-டு:   விளத்துக்கண்,  பலாவத்துக்கண்  எனவரும். ‘‘அத்தி னகரம்
அகரமுனை    இல்லை’’    என்றதனான்   விளத்துக்கண்  என நின்றது.
விளவத்துக்கண் எனக்காட்டித் “தெற்றென் றற்றே” (புணரியல் - 31) என்ற
மிகையான் அகரம் கெடாது நின்றது என்பார்   நச்சினார்க்கினியர்.
 

சூ. 182 :

ஞநவென் புள்ளிக்கு இன்னே சாரியை

(10)
 
க-து :

ஞ  ந  என்னும்   புள்ளியீற்றுச்     சொல்முன்    இன்சாரியை
பெறுமென்கின்றது.
 

பொருள் :ஞகர  நகரப் புள்ளிகளை ஈறாக உடைய சொற்களின் முன்
உருபு வருங்கால் இன் சாரியை பெறும்.
 

எ-டு:உரிஞினை,   உரிஞினொடு,   பொருநினை,    பொருநினொடு
எனவரும்.  இவை  தொழிற்பெயர். வெரிநினை, வெரிநினொடு இது பெயர்.
ஏனை  உருபுகளொடும்   ஒட்டிக்   கொள்க.   (வெரிந் = முதுகு) ஏகாரம்
இசைநிறை.