சூ. 186 : | இன்னிடை வரூஉம் மொழியுமா ருளவே |
(14) |
க-து : | ஒரு சார் மகர ஈற்றுச் சொற்குச் சிறப்புவிதி கூறுகின்றது. |
பொருள் :மகர ஈற்றுச் சொற்களுள் இன்சாரியை இடையே வரும் சொற்களும் உளவாம். ஆர் - அசை, ஏ - இசைநிறை. |
எ-டு:உருமினை, உருமினொடு; திருமினை, திருமினொடு எனவரும். ஏனைய உருபொடும் ஒட்டிக் கொள்க. உரும் = இடியேறு. இது பெயர். திரு= திரும்புதல். இது தொழிற்பெயர். |
‘‘இடைவரூஉம்’’ என்றதனான் அத்துப்பெறுவன சிறுபான்மை இன்சாரியையை உடன் பெறுதலும் கொள்க. |
எ-டு :மரத்தினை, புலத்தினை எனவரும். |
சூ. 187 : | நும்என் இறுதி இயற்கை யாகும் |
(15) |
க-து : | நும் என்னும் மகர ஈற்றிற்கு எய்தியது விலக்குகின்றது. |
பொருள் :நும் என்னும் முன்னிலைப் பன்மைப் பெயரிறுதி முன் உருபு வருங்கால் சாரியை இன்றி இயல்பாக வரும். |
எ-டு:நும்மை,நும்மொடு,நுமக்கு, நும்மின், நுமது, நும்கண் எனவரும். |
நுமக்கு என்பதன்கண் நிலைமொழி அகரப்பேறும் வல்லெழுத்து மிகுதியும். நுமது என்பதன்கண் ஆறன் உருபின் அகரக்கேடும். ‘‘நும்மென் இறுதியும்’’ (சூ. 162) ‘‘வல்லெழுத்து முதலிய’’ (சூ. 114) என்பவற்றானும் ‘‘ஆறன் உருபின் அகரக் கிளவி’’ (சூ. 115) என்பதனானும் நுங்கண் என்பதன் மகரக் கேடும் ஙகர மிகுதியும் ‘‘மகரஇறுதி’’ (சூ. 311) ‘‘வல்லெழுத்து முதலிய’’ (சூ. 114) என்பவற்றானும் அமையும். |
இவ்விளக்கம் மேல்வரும் தாம், நாம், எம், எல்லாம் என்னும் பெயர்கட்கும் தம், நம், நும் என்னும் சாரியைகட்கும் பொருந்தும். |
சூ. 188 : | தாம்நாம் என்னும் மகர இறுதியும் |
| யாமென் இறுதியும் அதனோ ரன்ன |
| ஆஎவ் வாகும் யாமென் இறுதி |
| ஆவயின் யகரமெய் கெடுதல் வேண்டும் |
| ஏனை இரண்டும் நெடுமுதல் குறுகும் |
(16) |
க-து : | தாம் நாம் யாம் என்னும் பெயர்கள் உருபேற்குங்கால் எய்தும் திரிபு கூறுகின்றது. |