எ-டு:எல்லார்தம்மையும் எல்லீர்நும்மையும் எனவரும். ஏனை உருபுகளொடும் ஒட்டி, முற்கூறிய விளக்கங்களொடு கண்டு கொள்க. |
‘‘நிற்றல் வேண்டும் ரகரப் புள்ளி’’ என்ற மிகையான் ஏனை ரகரஈற்றுப் படர்க்கைப்பெயர், முன்னிலைப் பெயர்களுள் ஒரு சாரனவற்றிற்கும் இச்சாரியையும் உம்மையும் வருதல் கொள்க. |
எ-டு:கரியார்தம்மையும், சான்றோர் தம்மையும் எனவும்; கரியீர்நும்மையும், சான்றீர்நும்மையும் எனவும் வரும். இன்னும் இதனானே அவர்தம்மை, இவர்தம்மை என உம்மையின்றிச் சாரியை மட்டும்பெற்று வருதலும் எல்லாரையும், எல்லீரையும் எனச் சாரியை இன்றி உம்மை மட்டும் பெற்று வருதலும் கொள்க. |
இனிச் சிறுபான்மை கரியேம்நம்மையும், இருவேம்தம்மையும் எனத் தன்மைப்பன்மைப்பெயர் நம்முச்சாரியையும் உம்மையும் பெற்று வருதலையும் எல்லாம் என்பது எல்லேம் எனத்திரிந்து தன்மைப் பெயராய் வருதலையும் புறனடையாற் கொள்க. |
சூ. 192 : | தான்யான் என்னும் ஆயீ ரிறுதியும் |
| மேல்முப் பெயரொடும் வேறுபா டிலவே |
(20) |
க-து : | தன்மை ஒருமைப் பெயர்கள் உருபு வருங்கால் திரியுமாறு கூறுகின்றது. |
பொருள் :தான், யான் என்னும் தன்மைப் பெயர்களின் அவ்இரண்டு ஈற்றுச் சொற்களும் மேலே தாம், நாம்,யாம் என்னும் பெயர்களுக்குக் கூறிய விதிகளொடும் வேறுபாடிலவாகும். |
திரிபொன்றையே சுட்டியுணர ‘‘மேல்முப் பெயரொடும்’’ என்றார்.என்றது; நாம், யாம் என்பவற்றிற்குரிய ஒருமைப் பெயராய யான் என்பது, யாம் என்பது திரிந்தாற்போல ஆகாரம் எகரமாதலும் யகர மெய் கெடுதலும், தாம் என்பதற்குரிய ஒருமைப் பெயராகிய தான் என்பது நெடுமுதல் குறுகித் தன் என நிற்றலும் விதி என்றவாறு. |
எ-டு:தன்னை, தன்னொடு, தனக்கு, தன்னின், தனது,தன்கண் எனவும், என்னை, என்னொடு, எனக்கு, என்னின், எனது, என்கண் எனவும் வரும். |
சூ. 193 : | அழனே புழனே ஆயிரு மொழிக்கும் |
| அத்தும் இன்னும் உறழத் தோன்றல் |
| ஒத்த தென்ப உணரு மோரே |
(21) |
க-து : | அழன் புழன் என்னும் சொற்கள் உருபொடு புணருமாறு கூறுகின்றது. |