ஆராயுங் காலத்து உருபுகளொடு பொருந்திப் புணரும்வழி இடையே சாரியை நிலைபெறல் வேண்டுமென்னும் கடப்பாடிலவாகும். சாரியை இன்றியும் புணரும். | கூறாது ஒழிந்தவை: ண, ய, ர, ல, ள என்னும் புள்ளியீறுகள் ஐந்தும் இகர உயிரீறு ஒன்றுமாம். | இவை மண்ணினை, மண்ணை; வேயினை, வேயை; ஊரினை, ஊரை; கல்லினை, கல்லை; முள்ளினை, முள்ளை எனவும் கிளியினை, கிளியை எனவும் சாரியை பெற்றும் பெறாதும் வருமாறு கண்டு கொள்க. ஏனை உருபுகளொடும் இவ்வாறே ஒட்டிக்கண்டு கொள்க. | கூறப்பெற்றனவற்றுள் தீயினை, தீயை என ஈகார ஈறும் கழையினை, கழையை என ஐகார ஈறும் கோவினை, கோவை என ஓகார ஈறும் புகழினை; பொன்னினை, பொன்னை என ழகர, னகரப் புள்ளியீறுகளும் இருநிலைமையவாயும் வந்தன. | மற்றும் அகரஈற்று மரப்பெயர்கள் அத்துச் சாரியையின் முதல் கெடாது விளவத்துக்கண் எனவருதலும், யாவை என்பதன் திரிபாகிய எவை என்னும் சொல் வற்றுப்பெற்று எவற்றை என வருதலும், னகர ஈற்றுள் எகின் என்பது அத்துப்பெற்று எகினத்தை எனவும், இன்பெற்று எகினினை எனவும் ழகர ஈறு இன்பெற்று யாழினை, பூழினை எனவும் சான்றோர் வழக்குப்பற்றி வருவனவெல்லாம் அடக்கிக் கொள்க. | “உருபொடு சிவணி’’ என்றதன் கருத்து, உருபுகள் பெயரொடுகூடி நின்றவழிப் பெயரும் உருபும் ஒன்றுபட்டு ஒரு சொல்நீர்மைத்தாய், நிறுத்த சொல்லாகி நிற்கும் என்பதும், அவ்வழி அவை உயிரீறும் புள்ளியீறுமாய் உயிர்மயங்கியல், புள்ளிமயங்கியல், குற்றியலுகரப் புணரியலுள் அவ்வவ்வீறுகளுக்கு ஓதப்பெற்ற விதிகளைப் பெற்றுக் குறித்துவருசொல்லொடு புணரும் என்பதும் உணர்த்துதலாம். | இன்னும் இதனானே தம்பொருட்டு, எம்பொருட்டு தம்முடைய, நும்முடைய; தம்பால், நும்பால் எனவும் வடசார், வடபால்; தென்பால், தென்சார், தென்புடை எனவும் உருபின் பொருட்டாய் வரும் சொற்கள் புணருங்காலும் நிலைமொழிகள் உருபு புணர்ச்சிக்கு ஓதிய செய்கைகளைப் பெறுதலும், ஒட்டுதற் கொழுகிய வழக்கொடு சிவணி வருமிடத்து உருபுபுணர்ச்சிக்கு ஓதிய சாரியைகள் பொருட்புணர்ச்சிக்கு வருதலும் கொள்க. | உருபியல் முற்றியது. |
|
|