நூன்மரபு219

வரும்  வியங்கோள்  வினைச்சொல்லும்,  செய்த என்னும்   வாய்பாட்டான்
வரும் பெயரெச்சச் சொல்லும், செய்யிய  என்னும்  வாய்பாட்டான்   வரும்
வினையெச்சச் சொல்லும், அம்ம என்னும்  உரையசைப் பொருட்டாய் வரும்
சொல்லும், அகர ஈற்று  அஃறிணைப்பன்மைப்  பெயர்ச்சொல்லும்  உட்பட
அவ்அனைத்துச்  சொற்களும்  கசதபக்கள்   வரின்  இயல்பாகப் புணரும்.
கசதபக்கள் என்பது அதிகாரத்தான் வந்தது.
 

எ. டு:  பொன்னன்ன  குதிரை, செந்நாய்,  தகர்,  புல்வாய்  எனவும்;
ஊர  கேள்,  செல், தா,  போ   எனவும்;  உண்மன  குதிரை,  செந்நாய்,
தகர்,  புல்வாய்   எனவும்,  ‘அன்றி  யனைத்தும்’  என்றதனான்  ஏனைய
அகரஈற்று முற்றுக்களின் முன் உண்டன குதிரை, கரியன  குதிரை எனவும்,
உண்க கொற்றா, சாத்தா, தேவா, பூதா எனவும், உண்ட குதிரை,  செந்நாய்,
தகர், புல்வாய் எனவும் “எதிர்மறுத்து மொழியினும்  பொருள்நிலை திரியா”
(சொல்-236) என்பதனான் எதிர் மறைப்  பெயரெச்சத்தின்  முன் உண்ணாத
குதிரை, வாராத செந்நாய் எனவும்,  குறிப்புப்  பெயரெச்சத்தின் முன் கரிய
குதிரை, பெரிய செந்நாய்  எனவும்,   அம்மகொற்றா, சாத்தா, தேவா, பூதா
எனவும், பலகுதிரை,  செந்நாய்,  தகர், புல்வாய் எனவும் வரும். பல்ல, சில,
உள்ள,  பிற என்னும்  பன்மைப் பெயரொடும், உண்டன கண்டார், கரியன
செல்லும்  எனத்   தொழில்நிலைஒட்டும்   (வினையாலணையும் பெயர்கள்)
பெயர்களொடும் இவ்வாறே ஒட்டி வன்கணம் இயல்பாதல் கண்டு கொள்க.
 

வினைபோல     நிகழ்தலின்றிப்        பொருட்குக்     குறியீடாகக்
கொடுக்கப்படுதலின் பெயரைப்   ‘பெயர்க்கொடை’   என்றல்   பண்டைய
வழக்கென்க.
 

சூ. 211 :

வாழிய என்னும் செய்கென் கிளவி

இறுதி யகரம் கெடுதலும் உரித்தே 

(9)
 

‘‘சேயென்கிளவி’’ என்பது  இளம்பூரணர்  பாடம்.   ‘‘செயவென்கிளவி’’
என்பது   நச்சினார்க்கினியர்   பாடம்.   ‘‘செய்யென்   கிளவி’’   என்பது
தெய்வச்சிலையார் பாடம். இவை யாவும் ஒவ்வாமை பின்னர் விளக்கப்படும்.
 

க - து:

ஏவல்  கண்ணாத  வியங்கோட்கிளவிகளுள்   ஒன்றற்குத்  திரிபு
கூறுகின்றது.
 

பொருள்: வாழ்க  எனப்  பொருள்படும்  ‘வாழிய’ என்று கூறப்படும்.
‘‘செய்க’’ என்னும் வாய்பாட்டு வியங்கோட்கிளவியின் இறுதி   நிற்கும் யகர
உயிர்மெய்  கெடுதலும்   உரித்தாகும்.  உம்மையாற்   கெடாது   நிற்றலும் உரித்தென்க.