பொருள்: மேற்கூறிய அம்ம என்னும் உரையசைக் கிளவியின் இறுதி, நீண்டு வருதலையும் நீக்கார் ஆசிரியர். |
உம்மை இறந்தது தழீஇய எச்ச உம்மை. இறுதி என்பது மேலைச் சூத்திரத்தினின்று அதிகரித்தது. |
எ. டு: அம்மா கொற்றா, சாத்தா, தேவா, பூதா எனவரும். ஆசிரியர் இந்நீட்சியை விளிப்பெயரொடு ஒப்பக்கொள்ளல் வேண்டுமென விளிமரபின்கண் விதந்து கூறுவார். |
இதுவும் நிலைமொழிச் செய்கையாதலின் இயல்புகணம்வரினும் இந்நீட்சி கொள்ளப்படும். எ. டு: அம்மா நாகா, வளவா, அழகா எனவரும். |
சூ. 213 : | பலவற் றிறுதி நீடுமொழி யுளவே |
| செய்யுள் கண்ணிய தொடர்மொழி யான |
(11) |
க - து: | அகர ஈற்றுப் பன்மைப் பெயர் சிலவற்றிற்குச் சிறப்பு விதி கூறுகின்றது. |
பொருள் : செய்யுள் வழக்கினையும் ஓசையினையும் கருதி வரும் தொடர் மொழிக்கண், பலவற்றை உணர்த்தி வரும் இறுதி அகரம் நீண்டு வரும் சொற்களும் உள. மொழியும் என்னும் எதிர்மறை உம்மை தொக்கு நின்றது. |
பல்ல, பல, சில, சில்ல என்பனவற்றுள் பல்ல, சில்ல என்பவை வினையொடு தொடருங்கால் நின்றாங்கே தொடரின் ஓசை நயமின்மை கருதிச் சான்றோர் தம் செய்யுளுள், “பல்லா கூறினும் பதடிகள் உணரார், சில்லா கொள்கெனச் செப்புநருளரே” என்றாற் போல வழங்கியிருத்தல் வேண்டுமெனத் தெரிகின்றது. இலக்கியங்காணாமையின் இவ்விதி சிந்தித்தற்குரியதாக உளது. |
இனி, இந்நூற்பாவிற்கு உரையாசிரியர் பல என்னும் சொல்லிறுதி எனவும், நச்சினார்க்கினியர் பலவற்றை உணர்த்தி வரும் ஐவகைச் சொற்களும் எனவும் உரை கூறியுள்ளனர். எனினும், இருவரும் “பலாஅஞ்சிலாஅம் என்மனார் புலவர்’’ என்னும் தொடரையே உதாரணமாகக் காட்டியுள்ளனர். இத்தொடர் வந்துள்ள செய்யுள் யாண்டுளது என்பது விளக்கப்படவில்லை. அவ்விருவரும் இத்தொடரையே அடிப்படையாக வைத்து உரை கூறியுள்ளனர் என்பது புலனாகின்றது. |
மற்று இவ்வுதாரணத்தில் வரும் ‘பலாஅம்’ ‘சிலாஅம்’ என்பவை பலவும் சிலவும் என்பவற்றின் விகாரமாதல் தெளிவு. அங்ஙனமாயின் இச்சொற்கள் மகர ஈறாதலன்றி அகர ஈறெனற் கேலாமை அறியலாம். அன்றியும் வருமொழி |