அற்றாயின், ‘‘பலவற்றிறுதி உருபியல் நிலையும்’’, ‘‘சுட்டுமுத லிறுதி உருபியல் நிலையும்’’ என்னுமிடங்களில் அதிகார வல்லெழுத்து மிக்க தன்றோ எனின்? அன்று. அவை, “அத்தே வற்றே” (புணரி-31) என்னும் சூத்திரத்து “அவற்றுமுன் வரூஉம் வல்லெழுத்து மிகுமே’’ எனச்சாரியைக்கு ஓதிய விதிப்படி மிக்கன என்க. சாரியை பெற்றவழி அதிகார வல்லெழுத்துக் கெடாது என்பது ஆசிரியர் கருத்தாயின் ‘‘ஆடூ மகடூ ஆயிரு பெயர்க்கும், இன்னிடை வரினும் மான மில்லை’’ (உயிர்-69) ‘‘பெற்ற மாயின் முற்றஇன் வேண்டும்’’ (உயிர்-77) ஏழென்கிளவி உருபியல் நிலையும் (புள்ளி-93) எனவருமிடத்தெல்லாம் வல்லெழுத்தியல்பாகும் என ஓதியிருப்பார் என்க. |
சூ. 219 : | அத்தவண் வரினும் வரைநிலை யின்றே |
(17) |
க - து: | மகவென்னும் சொற்கு அத்துச் சாரியையும் வருமென்கின்றது. |
பொருள்: மகவென்னும் சொல்லிடத்து இன்சாரியையே யன்றி அத்துச்சாரியை வரினும் நீக்கும் நிலைமையின்று. |
எ.டு: மகத்துக்கை, செவி, தலை, புறம் எனவரும். |
‘அவண்’ என்பதனான் மகப்பால்யாடு என வல்லெழுத்து மிகுதலும் கொள்க என்பார் நச்சினார்க்கினியர். சாரியை பெறாதவழிப் பொது விதியான் வல்யெழுத்துமிகுதல் கூறாமலே அமையுமென்க. ‘நிலை’ என்றதனான் மகம்பால்யாடு என மெல்லெழுத்துப் பெறுதலும் கொள்க என்பார் அவர். அதனைச் செய்யுள் விகாரமாகக் கோடலே நேரிதென்க. |
சூ. 220 : | பலவற் றிறுதி உருபியல் நிலையும் |
(18) |
க - து: | அகர ஈற்றுப் பலவறி சொற்காவதொருவிதி கூறுகின்றது |
பொருள் : பலவறி சொற்களின்கண் வரும் அகரஇறுதி உருபொடு புணரும் இலக்கணத்தை ஒத்து நிலைபெறும் என்றது; வற்றுச்சாரியை பெற்றுப்புணரும் என்றவாறு. |
எ டு : பலவற்றுக்கோடு, செதிள், தோல், பூ எனவரும். பல்ல, சில்ல, சில என்பவற்றொடும் நல்லன, கரியன, உண்டன என்னும் வினையாலணையும் பெயர்களொடும் ஏற்பன கூட்டிக் கண்டு கொள்க. |
சூ. 221 : | ஆகார இறுதி அகர இயற்றே |
(19) |
க - து: | ஆகார ஈற்றுச் சொற்கள் அல்வழிக்கண் புணருமாறு கூறுகின்றது. |