உண்ணாகிடந்தன என்பது உண்ணாதவையாகிய குதிரைகள் கிடந்தன என்னும் வினையாலணையும் பெயர். உண்கா என்பது யான் உண்பேனா? என்னும் பொருளது. |
சூ. 225 : | வேற்றுமைக் கண்ணும் அதனோ ரற்றே |
(23) |
க - து: | ஆகார ஈற்றுப்பெயர் வேற்றுமைவழிப் புணருமாறு கூறுகின்றது. |
பொருள்: ஆகார ஈற்றுப் பெயர், வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக் கண்ணும் அல்வழிப் புணர்ச்சியொடு ஒத்த தன்மைத்தேயாம். அஃதாவது; கசதபக்கள் வரின் மிக்குப்புணரும் என்றவாறு. |
எ. டு: தாராக்கால்; மூங்காக்கால், செவி, தலை, புறம் எனவரும். (தாரா-ஒருபறவை; மூங்கா-கீரிப்பிள்ளை) |
சூ. 226: | குறியதன் முன்னரும் ஓரெழுத்து மொழிக்கும் |
| அறியத் தோன்றும் அகரக் கிளவி |
(24) |
க - து : | ஒருசார் ஆகார ஈற்றுச் சொற்களுக்குச் சிறப்பு விதி கூறுகின்றது. |
பொருள்: குற்றெழுத்தின்முன் நிற்கும் ஆகார ஈற்றுச் சொற்கும் ஓரெழுத் தொருமொழியாய் நிற்கும் ஆகார ஈற்றுச் சொற்கும் அவற்றின் பொருள் விளங்க ஓர் அகர எழுத்துத் தோன்றும். |
எ. டு: பலாஅக்கோடு, செதிள், தோல், பழம் எனவும், காஅக்குறை, காஅச்சிதைவு, காஅத்தலை, காஅப்புறம் எனவும் வரும். கா-காவுதடி. |
‘அறிய’ என்பதனை மிகையாகக் கொண்டு அண்ணாஅத்தேரி, திட்டாஅத்துக்குளம் என அத்துக் கொடுக்க என்பார் நச்சினார்க்கினியர். அவை அண்ணா அத்தன், திட்டா அத்தன் என்னும் பெயர்களின் மரூஉவாக வழங்கும் மொழிகளாதலின் அத்துச் சாரியை எனல் பொருந்தாதென்க. இனி உவாத்து ஞான்று கொண்டான், உவாத்தாற் கொண்டான் என்பவை சான்றோர் வழக்கல்லவாகலின் அமைத்தல் வேண்டா என்க. மற்று அவர் கூறும் ஏனையவை எடுத்தோத்துக்களான் முடியற்பாலனவேயாமென்க. |
இனி, இவ் அகரப்பேறு வருமொழி வரையாது கூறினமையின் பலாஅநார், பலாஅவேர், பலாஅவிலை என இயல்புகணத்தும் சிறுபான்மை வருதல் கொள்க. |