நூன்மரபு229

சூ. 227 :

இராவென் கிளவிக்கு அகரம் இல்லை
(25)
 

க - து

இரா  (இரவு)   என்னும்   சொற்கு   எய்தியது விலக்குகின்றது.
 

பொருள்: இரா  என்னும் பொழுது குறித்து வரும் சொல்லிற்கு அகரம்
தோன்றுதல் இல்லை.
 

எ. டு: இராக் கொண்டான், சென்றான், தந்தான், போயினான்  எனவும்
இராக்காக்கை, இராக்கூத்து  எனவும்   வரும்.  இராநோன்பு,  இராவனப்பு,
இராவெல்லை என இயல்புகணத்தொடும் ஒட்டிக் கொள்க.  இராஅக்காக்கை
என அகரந் தோன்றின் அஃது எதிர்மறைப்  பெயரெச்சப்  பொருள் தரும்
ஆதலின் பொழுது குறித்த சொல்லுக்கு அகரம் இல்லை என்றார்.
 

சூ. 228 :

நிலாவென் கிளவி அத்தொடு சிவணும் 

(26)
 
க - து :

நிலா  என்னும்   சொல்லுக்குப்   பிறிதொரு  விதி கூறுகின்றது.
 

பொருள் :   திங்களை   உணர்த்தும்     நிலா     என்னும்   சொல்
அத்துச்சாரியையொடு பொருந்தி வரும்.
 

எ. டு: நிலாஅத்துக்கொண்டான்,   சென்றான்,  தந்தான்,  போயினான்
எனவரும்.     நிலாஅத்து   நின்றான்,   வந்தான்,    இருந்தான்    என
இயல்புகணத்தொடும் ஒட்டிக் கொள்க.
 

‘சிவணும்’  என்றதனான்  சிவணாதவழி நிலாஅக்கதிர் என வன்கணத்து
அகரமும்  வல்லெழுத்தும்,  நிலாஅமுற்றம்  என அகரமும் பொதுவிதியாற்
பெறும் எனக் கொள்க.
 

இச்சூத்திரபாடம்  ‘‘அத்தொடுஞ்சிவணும்’’   என்றிருத்தல்   வேண்டும்.
அவ்வழி மிகையாற் கொள்ளப் பெற்றவை சூத்திரத்தானே அடங்குமென்க.
 

சூ. 229 :

யாமரக் கிளவியும் பிடாவும் தளாவும் 

ஆமுப் பெயரும் மெல்லெழுத்து மிகுமே  

(27)
 
க - து:

ஒருசார் மரப்பெயர்கட்கு  வல்லெழுத்து  விலக்கி மெல்லெழுத்து
விதிக்கின்றது.
 

பொருள்: யா, பிடா, தளா  என்னும்  ஆகாரஈற்று மரப்பெயர்களாகிய
அம்மூன்று பெயர்களும் மெல்லெழுத்து மிக்குமுடியும்.
 

எ.டு: யாஅங்கோடு; பிடாஅங்கோடு; தளாஅங்கோடு, செதிள்,  தோல்,
பூ எனவரும்.