சூ. 234 : | குறியதன் இறுதிச் சினைகெட உகரம் |
| அறிய வருதல் செய்யுளுள் உரித்தே |
(32) |
க-து: | ஆகார ஈற்றுச் சொல் சிலவற்றிற்குச் செய்யுள் வழக்குப் பற்றியதொரு விதி கூறுகின்றது. |
பொருள்: குற்றெழுத்தினை அடுத்துநிற்கும் ஆகார ஈற்றுச் சொல்லிறுதியின் நிற்கும் ஆகாரம், ஒரு கூறுகெட்டு நிற்க, ஆண்டோர் உகரம் பொருள் விளங்க வருதல் செய்யுள் வழக்கிடத்து உரியதாகும். சினை-கிளை. கிளை என்பது ஒரு பொருளின் கூறாகலின் ஈண்டு எழுத்தினது கூறு ‘சினை’ எனப்பட்டது. |
‘முதலும் சினையும் பொருள்வேறு படாஅ நுவலுங் காலைச் சொற்குறிப் பினவே’ (வேற்-மய-6) என்றதனான் ஒன்றற்குச் சினையாவதே பிறிதொன்றற்கு முதலாக வருமாதலின் மொழிக்கு உறுப்பாகி நிற்கும் எழுத்து, அச்சொல்லுக்குச் சினையாதலும் அவ்எழுத்தின் மாத்திரை அளவும் ஒலிக்கூறுகளும் எழுத்திற்குச் சினையாதலும் பெறப்படும். ‘குற்றிய லிகரம் நிற்றல் வேண்டும் யாவென் சினைமிசை உரையசைக் கிளவிக்கு’ (மொழி-1) என்னுமிடத்து மியா, என்னும் சொல்லின் உறுப்பாக நிற்கும் யகர ஆகாரமாகிய உயிர்மெய்யெழுத்துச் சினை எனப்பட்டது. ‘சுட்டுச்சினை நீடிய ஐயென் இறுதி’ (தொகை-17) ‘சுட்டுச்சினை நீடிய மென்றொடர் மொழியும்’ (குற்-புண-22) என்னுமிடங்களில் சுட்டெழுத்தின் மாத்திரையளவு சினையெனப்பட்டது. ‘நூறென் கிளவி ஒன்றுமுத லொன்பாற்கு ஈறுசினை ஒழியா இனஒற்று மிகுமே’ (குற்-புண-67) என்னுமிடத்து றகர மெய்யினை ஊர்ந்து நின்ற குற்றியலுகரம் சினை எனப்பட்டது. இவ்வாறே, மொழியிடையிலும் இறுதியிலும் ஐகார எழுத்தின் போலியாக வரும் ‘அய்’ என்பதும் மொழியினது உறுப்பாக வருதலின் ‘ஐயென் நெடுஞ்சினை’ எனப்பட்டது. இங்ஙனம் ஒலியும் இசையுமாகிய வற்றான் ஆக்கம் பெற்றுள்ள மொழியினது மெய்ம்மையை ஓர்ந்து தொல்லாசிரியன்மார் அந்நுட்பம் விளங்கப் புணர்மொழி இலக்கணங்களை அமைத்து ஓதியுள்ள அறிவியல் திறத்தை அறிந்து கொள்க. |
அம்மரபானே குற்றெழுத்தின் இறுதி நின்ற ஆகாரத்தின் மாத்திரையுள் ஒரு கூற்றினை ஈண்டுச் சினை என்று உணர்த்தினார் என அறிக. |
எ. டு:‘‘இறவுப் புறத்தன்ன பிணர்படு தடவுமுதல், சுறவுக் கோட்டன்ன முள்ளிலைத்தாழை’’ எனவும் ‘‘புறவுப் புறத்தன்ன புன்காய் உகாய்’’ எனவும் வரும். |