செய்யுள் வழக்கு உலகவழக்கு என்பவை யாப்பமைதியும் அஃதின்மையும் கருதி வகுத்துக் கொள்ளப்பட்டவையன்றி ஒன்று ஒன்றனுள் விரவாதென்பது கருத்தன்று என்பது மேலே விளக்கப் பட்டது. அதனான் நிலவுக்கதிர், கனவுக்காட்சி, முழவுத்தோள், அரவுப் பகை என வழக்கிடத்தும் வருமெனக் கொள்க. |
வருமொழி வரையாது கூறினமையான் இயல்புகணத்தும் இறவுஞாற்சி, நீட்சி, மாட்சி, யாப்பு, வன்மை, உயர்ச்சி, எழுச்சி எனவரும். |
இவ்உகரம் எழுத்துப்பேறாகிய சாரியையாதலின் உயிர் முதன் மொழிவந்து புணருங்கால் தான் ஊர்ந்து நின்ற உடம்படுமெய்யை நிறுத்தித்தான் நீங்கிவிடும். நின்ற உடம்படுமெய்யின் மேல் வரும் உயிர் ஏறிப் புறவெழுச்சி, சுறவாட்சி, முழவுயர், திணி்தோள் எனப்புணர்ந்து நிற்கும். |
இது நிலைமொழிச் செய்கைக்குரிய விதியாதலின் இறுதி நெடில் குறுகி உகரம் பெற்று நின்ற வழி அவ்வுகரம் விதியீறாக நிற்றலின் அல்வழிக்கண் உகர ஈற்றிற்குரிய புணர்ச்சிவிதிபெற்று உயிர்க்கணமல்லாத ஏனைமூன்று கணங்களொடும் புணரும். |
எ.டு: கனவு கூடிற்று, நீண்டது, வலிது எனவரும். உயிர்வரின் சாரியை உகரம் நீங்கிக் கனவழகிது எனவரும். |
இச்சொல்லியல்பும் மொழியாக்கமரபும் கருதாத உரை யாசிரியன்மார் மிகைப்படுத்துக்கூறும் கருத்துக்கள் யாவும் ஆசிரியர் கருத்திற்கும் அறிவியலுக்கும் ஒவ்வாமை புலனாகும். |
சூ. 235 : | இகர இறுதிப் பெயர்நிலை முன்னர் |
| வேற்றுமை யாயின் வல்லெழுத்து மிகுமே |
(33) |
க - து: | இகர ஈற்று அல்வழிப் பொதுப்புணர்ச்சி தொகைமரபினுள் பெறப்படுதலின் ஈண்டு அவ்ஈற்று வேற்றுமை முடிபு கூறுவார். |
பொருள் : இகர ஈற்றுப் பெயர்ச்சொல்லின் முன்வரும் வல்லெழுத்து வேற்றுமைப் பொருண்மையுடையதாயின் மிக்குப்புணரும். |
எ. டு: கிளிக்கால், சிறை, தலை, புறம் எனவரும். கோழிக்கால், சீற்றம், தாக்கு, போர் எனப் பிறசொற்களொடும் கூட்டுக. |
இனிக் கிளிக்குறுமை, கிளிகுறுமை என உறழ்ந்தும் வருமென்பார் உரையாசிரியர். கிளிகுறுமை என்பது கிளி குறுமையாக உளது என்னும் பொருள்பட வந்ததாகக் கொள்வதன்றி வேற்றுமைப் பொருள் படவிரித்தற்கு ஏலாதென்க. |