நூன்மரபு237

எ. டு: பனியத்துக்     கொண்டான்;      பனியிற்     கொண்டான்,
சென்றான், தந்தான்,   போயினான்   எனவரும்.   அத்து   இடப்பொருள்
தோன்றச் சிறந்து நிற்றல் கருதி முற்கூறப்பட்டதென்க.
 

சூ. 242 :

வளியென வரூஉம் பூதக் கிளவியும்

அவ்வியல் நிலையல் செவ்வி தென்ப

(40)
 

க - து:

வளி   என்னும்   சொல்லும்    மேற்கூறிய    சாரியைகளைப்
பெறுமென்கின்றது.
  

பொருள : வளி   என்னும்   நோயை  உணர்த்தாமல் ஐம்பூதங்களுள்
ஒன்றை   உணர்த்திவரும்   வளி என்னும்   சொல்லும்   மேற்கூறியாங்கு
அத்தும்   இன்னும்    ஆகிய     சாரியைகளைப்     பெற்று   வருதல்
சிறப்புடைத்தென்று கூறுவர் புலவர்.
 

எ. டு: வளியத்துக் கொண்டான்; வளியிற்  கொண்டான்,   சென்றான்,
தந்தான், போயினான் எனவரும்.
 

பனியினிடத்துக் கொண்டான்,   பனியினானே   கொண்டான்  என்னும்
பொருளுக்கியையாமல் பனியாகிய  பொழுதின்கண்   கொண்டான்   எனப்
பொருள்  தருதலின்  இவை   சாரியையாயின  என   அறிக.  வளியத்துக்
கொண்டான் என்பதற்கும் இவ்விளக்கம் ஒக்கும்.
 

இனிப் பனியும் வளியும் நோயை   உணர்த்தும்    சொல்லாக   வரின்
பனிக்காய்ச்சல், பனிக்கொண்டான்,  வளிப்பிடிப்பு  எனப்   பொதுவிதியான்
முடியுமென்க.
 

சூ. 243 :

உதிமரக் கிளவி மெல்லெழுத்து மிகுமே
(41)
 

க - து:

உதி என்னும் மரப்பெயர்க்கு  மெல்லெழுத்துமிகும்  என்கின்றது.
 

பொருள்: உதி   என்னும்   மரப்பெயராகிய சொல் கசதபக்கள் வரின்
அவற்றின் கிளையாகிய மெல்லெழுத்து மிகும்.
 

எ.டு: உதிங்கோடு,    உதிஞ்செதிள்,      தோல்,    பூ   எனவரும்.
 

உதிமரம் என்பது  இருபெயரொட்டு. உதி என்பதைப் பல பொருளொரு
சொல்லாகக் கருதி  நச்சினார்க்கினியர்  உதித்தல்  என்னும்   தொழிலன்றி
மரத்தினை உணர்த்தி நின்றசொல் என உரை கூறுதல் பொருந்துமாறில்லை.
ஆசிரியர்க்கு அது கருத்தாயின் உதியென வரூஉம் மரப்பெயர்க்கிளவி என
விளங்க   ஓதியிருப்பார்.    அன்றியும்   உதித்தல்    என்பது   ஆரியச்
சொல்லாதலையும்       அறிக.          அன்றியும்      தொழிற்சொல்
வேற்றுமைப்பொருள்படப் புணராதென்பதனையும் அறிக.