நூன்மரபு238

இனி,  உதியங்கோடு  என  அம்முப்பெறுதல்  இடைக்கால  வழக்காதலான்
அதனைப் புறனடையாற் கொள்ளல் தகும்.
 

சூ. 244 :

புளிமரக் கிளவிக்கு அம்மே சாரியை
(42)
 

க - து:

புளி  என்னும்  மரப்பெயர்க்குச்  சிறப்பு   விதி   கூறுகின்றது.
 

பொருள : புளி       என்னும்       மரப்பெயர்ச்      சொல்லுக்கு
அம்முச்சாரியையாகும்.   எ. டு: புளியங்கோடு,   செதிள்,   தோல்,  பழம்
எனவரும்.
 

புளி   என்பது   ஆகுபெயராய்   மரத்தை   உணர்த்தலன்றிப்   பல
பொருளொருசொல்  அன்மையான்,  சுவையன்றிப்  புளி  என்னும் மரத்தை
உணர்த்தும்  சொல்  என   நச்சினார்க்கினியர்    கூறுதல்   ஏலாதென்க.
‘புளிங்காய்’ (ஐங்-51) என்பது செய்யுள் விகாரமென அறிக.
 

சூ. 245 :

ஏனைப் புளிப்பெயர் மெல்லெழுத்து மிகுமே 
(43)
 

க - து:

புளி   என்னும்   சுவைப் பெயர்க்குப் பிறிது விதி  கூறுகின்றது.
 

பொருள்: ஆகுபெயராய்    மரத்தை     உணர்த்தும்   சொல்லன்றி
இயற்பெயராகச் சுவையை உணர்த்தும்  ஏனையதாகிய புளி என்னும் பெயர்
மெல்லெழுத்து மிகும்.
 

எ.டு: புளிங்கூழ், புளிஞ்சோறு, புளிந்தயிர்,  புளிம்பாளிதம்  எனவரும்.
 

சூ. 246 :

வல்லெழுத்து மிகினும் மான மில்லை 

ஒல்வழி யறிதல் வழக்கத் தான 

(44)
 

க - து:  

சுவைப் பெயர்க்கு  எய்தியதன்  மேற்சிறப்பு  விதி கூறுகின்றது.
  

பொருள : மேற்கூறிய      சுவைப்புளிக்கு      மெல்லெழுத்தேயன்றி
வல்லெழுத்து  மிகினும்     குற்றமில்லை.     வழக்கின்கண்    அவ்வாறு
வருமிடமறிந்து கொள்க.
 

எ.டு: புளிக்கறி, புளிச்சோறு, புளித்துவையல்,  புளிப்பாகர்  எனவரும்.
‘‘ஒல்வழியறிதல் வழக்கத்தான’’ என்றதனான்  கணவிரி-கூதாளி முதலியவை
அம்முப்பெற்று இகரங்கெட்டு,   கணவிரங்கோடு,  கூதாளங்கோடு  எனவும்
கூதாளி   என்பது  அத்துப்  பெற்றுக்  கூதாளத்துத்   தண்பூங்கோதையர்
எனவருதலும் கொள்க. இனிக், கட்டிடி - கட்டகல் என்பவை மரூஉவாதலின்
புறனடையாற் கொள்க.