நூன்மரபு239
சூ. 247 :

நாள்முன் வரூஉம் தொழில்நிலைக் கிளவிக்கு 

ஆன்இடை வருதல் ஐய மின்றே 

(45)
 

க - து :

இகர   ஈற்று   நாட்பெயர்க்குச்   சிறப்பு   விதி  கூறுகின்றது.
 

பொருள்: இகரஈற்று நாட்பெயரின்   முன்னர்த்    தோன்றி   வரும்
தொழில்நிலைச் சொற்கு இடையே ‘ஆன்’   என்னும்   சாரியை   வருதல்
ஐயமின்று.
 

எ.டு: பரணியாற்  கொண்டான்,   சென்றான்,  தந்தான்,  போயினான்
எனவரும். ‘‘ஐயமின்று’’ என்றதனான் சிறுபான்மை இன்  சாரியை  வரினும்
கொள்க.
 

சூ. 248 : 

திங்கள் முன்வரின் இக்கே சாரியை
(46)
 

க - து:

இகர ஈற்றுத்  திங்கட்பெயர்க்குச்  சிறப்பு   விதி  கூறுகின்றது.
 

பொருள : இகர ஈற்றுத் திங்கட்பெயர்  முன்னர்த்   தொழில்  நிலைச்
சொல்வரின் இடையே இக்குச்சாரியை வரும்.
 

எ.டு: ஆடிக்குக்  கொண்டான்,  சென்றான்,   தந்தான்,   போயினான்
எனவரும்.
 

சூ. 249 :

ஈகார இறுதி ஆகார இயற்றே 
(47)
 

க - து:

ஈகார    ஈற்று      அல்வழிப்புணர்ச்சியாமாறு   கூறுகின்றது.
 

பொருள : ஈகார ஈற்றுப்பெயர் ஆகார ஈற்றிற்கு ஓதிய இயல்பிற்றாகும்.
என்றது; கசதபக்கள்வரின் மிக்குமுடியும் என்றவாறு.
 

எ. டு: ஈக்கடிது,     சிறிது,       தீது,      பெரிது     எனவரும்.
 

சூ. 250 :

நீஎன் பெயரும் இடக்கர்ப் பெயரும் 

மீயென மரீஇய இடம்வரை கிளவியும் 

ஆவயின் வல்லெழுத் தியற்கை யாகும் 

(48)
 

க - து:

ஈகார  ஈற்றுப்   பெயர்   மூன்றற்கு எய்தியது விலக்குகின்றது.
 

பொருள்: நீ என்னும் முன்னிலை   ஒருமைப்   பெயரும், பகர ஈகார
மாகிய இடக்கர்ப்   பெயரும்,   மீ என    மருவி    நிற்கும்   இடத்தை
வரைந்துணர்த்தும்   சொல்லும்,   அல்வழியிடத்து   வல்லெழுத்து  வரின்
இயல்பாகப்  புணரும்.  மீ  என்பது   மேலாய   பண்பையும்   ஒன்றனது
மேற்பகுதியையும் குறிக்கும் சொல்லின்   மரூஉவாதலின்  ‘‘மீஎன  மரீஇய’’
என்றார்.