நூன்மரபு241
சூ. 253 :

நீஎன் ஒருபெயர் உருபியல் நிலையும் 

ஆவயின் வல்லெழுத் தியற்கை யாகும் 

(51)
 

க - து:

நீ   என்னும்     சொற்குச்    சிறப்பு    விதி    கூறுகின்றது.
 

பொருள்: நீ  என்னும்  முன்னிலை  ஒருமைப்  பெயர்,  வேற்றுமைப்
பொருட் புணர்ச்சிக்கண்,   உருபு   புணருங்கால்   எய்தும்  இயல்பினைப்
பெற்று நிற்கும். அவ்விடத்து  அவ்உருபியலிற்   கூறியாங்கு  வல்லெழுத்து
மிகாது இயல்பாகப் புணரும்.
 

அஃதாவது நெடுமுதல் குறுகி னகரம் பெறுதலும் ஆண்டு ‘‘வல்லெழுத்து
முதலிய  வேற்றுமை  உருபிற்கு’’  ஓதிய வல்லெழுத்து ஈண்டு மிகாமையும்
பொருட்புணர்ச்சிக்குரிய தன்மையாகும் என்றவாறு.
 

எ. டு: நின்கை,  செவி,  தலை,  புறம்  எனவரும். நிற்கண்டு என்பது
இரண்டாவதன் திரிபாகும்.
 

உரையாசிரியன்மார்   வல்லெழுத்தியற்கை     என்பதற்கு     இயைபு
வல்லெழுத்து எனக்கூறுவது பொருந்தாமையறிக.
 

சூ. 254 :

 உகர இறுதி அகர இயற்றே
(52)
 

க - து:

உகர   ஈற்று    அல்வழிப்புணர்ச்சி    ஆமாறு   கூறுகின்றது.
 

பொருள்: உகர ஈற்றுப் பெயர் அல்வழிக்கண் அகர ஈற்று  அல்வழிப்
புணர்ச்சிக்கு   ஓதிய   இயல்பிற்றாகும்.   என்றது;   கசதபக்கள்   வரின்
மிக்குமுடியும் என்றவாறு.
 

எ. டு: கடுக்குறிது,  சிறிது,   தீது,  பெரிது  எனவரும்.  (கடு-கடுமரம்)
 

சூ. 255 :

சுட்டின் முன்னரும் அத்தொழிற் றாகும்
(53)
 

க - து:

உகர ஈற்றுச்   சுட்டிடைச்சொல்     புணருமாறு   கூறுகின்றது.
 

பொருள்: உகர  ஈற்றுச்   சுட்டிடைச்சொல்   முன்னரும்  மேற்கூறிய
செய்கையை உடையதாய் வல்லெழுத்து மிக்கு முடியும்.
 

எ. டு: உக்கொற்றன்,   சாத்தன்,    தேவன்,     பூதன்   எனவரும்.
 

சூ. 256 :

ஏனவை வரினே மேனிலை இயல்பே 
(54)
 

க - து:

உகரச் சுட்டின் முன் ஏனைக் கணங்கள் புணருமாறு கூறுகின்றது.