பொருள் : உகரச்சுட்டின்முன் வல்லின மல்லாத ஏனைக் கணங்கள் வரின் மேல் அகரச் சுட்டிற்குக் கூறிய இலக்கணமேயாகும். ஏகாரம் -இசைநிறை, ஈற்றசை. |
எ. டு: உஞ்ஞாண், நூல், மணி எனவும் உவ்யாழ், உவ்வட்டு எனவும் உவ்வணி, உவ்வாடை எனவும் ஊவயினான எனவும் வரும். |
சூ. 257: | சுட்டுமுதல் இறுதி இயல்பா கும்மே |
(55) |
க -து: | உகர ஈற்றுச் சுட்டுப் பெயர் புணருமாறு கூறுகின்றது. |
பொருள் : சுட்டெழுத்துக்களை முதலாக உடைய உகர ஈற்றுச்சுட்டுப் பெயரிறுதி இயல்பாகும். |
எ. டு: அதுகுறிது, சிறிது, தீது, பெரிது எனவரும். இது, உது என்பவற்றொடும் அவ்வாறே ஒட்டிக் கண்டு கொள்க. |
சூ. 258: | அன்றுவரு காலை ஆவா குதலும் |
| ஐவரு காலை மெய்வரைந்து கெடுதலும் |
| செய்யுள் மருங்கின் உரித்தென மொழிப |
(56) |
க -து: | மேற்கூறிய சுட்டுப்பெயர் செய்யுள் வழக்கிற்படும் விதி கூறுகின்றது. |
பொருள்: உகரஈற்றுச் சுட்டுப்பெயரின் முன்னர் அன்று என்னும் வினைக்குறிப்புச்சொல் வருங்காலத்து இறுதி உகரம் ஆகாரமாகத் திரிதலும், ஐ என்னும் சாரியை வருங்காலை அவ் உகரம் தான் ஊர்ந்து நிற்கும் மெய்யினைக் கெடாது நிறுத்தித் தான்மட்டும் கெடுதலும், செய்யுள்வழக்கிடத்து உரியதாகும் எனக் கூறுவர் புலவர். |
செய்யுள் முடிபாதலான் ஐகாரச் சாரியை புணருங்கால் குற்றொற்று இரட்டா தென்க. இவ்ஐகாரம் சாரியை என்பது சுட்டுமுதல் உகரம் அன்னொடு சிவணி (உருபு-4) என்றதனானும் முன்னுயிர் வருமிடத்து ஆய்தப் புள்ளி (குற்-புண-18) என்றதனானும் உய்த்துணரப்படும். |
எ. டு: அதாஅன்று என்பது வெண்பா யாப்பே. இதாஅன்றம்ம, உதாஅன்றம்ம எனவும் அதை மற்றம்ம, இதை மற்றம்ம, உதை மற்றம்ம எனவும் வரும். |
இனி நச்சினார்க்கினியர், ‘‘மொழிந்த பொருளோடொன்ற அவ்வயின் முடியாததனையும் முட்டின்று முடித்தல்’’ என்னும் |