நூன்மரபு247

விண்மீனின்  பெயராகிய   உடூ  என்பது  உடு   என  உகர  ஈறாய்
வழங்குகின்றது.  ஆடூ,  மகடூ  என்பவை குற்றெழுத்தின்பின் வந்த ஊகார
ஈறு அல்லவாயினும், ஒப்புமையாக்கத்தான் உகரம் பெற்று  ஆடூஉ, மகடூஉ
என வழங்கப்படுகின்றன. வழங்கினும் அவற்றை உகர ஈறாகக் கொள்ளாமல் ஊகார ஈறாகவே கொள்க.
 

சூ. 268 :

பூவென் ஒருபெயர் ஆயியல் பின்றே

ஆவயின் மெல்லெழுத்து மிகுதலும் உரித்தே 

(66)
 

க-து :
 

பூவென்னும் பெயர்க்கு உறழ்ச்சி கூறுகின்றது.
 

பொருள்:மலரைக்  குறித்துவரும்  பூ  என்னும்   ஒரு  பெயர்ச்சொல்
மேற்கூறிய  உகரம்  பெறுதலாகிய அவ்விலக்கணத்ததன்று. பொதுவிதியான் வல்லெழுத்து மிகுதலேயன்றி அவ்விடத்து மெல்லெழுத்து மிகுதலும் உரித்து. உம்மை எச்ச உம்மை.
 

எ. டு:பூங்கொடி,  சோலை,  தார்,  பந்து  எனவும் பூக்கொடி,பூச்செடி, பூத்தொடை,  பூப்பந்தர்   எனவும்   வரும்.  பூ  என்பது  பொலிக எனப் பொருள்தரும்  ஏவல்வினையுமாகலின்  அதனை  நீக்குதற்குப் பெயர் என விதந்தார்.
 

சூ. 269 :

ஊவென் ஒருபெயர் ஆவொடு சிவணும்

(67)
 

க-து :
 

ஊ என்னும் பெயர் சாரியை பெற்றுப் புணருமென்கின்றது.
 

பொருள் :தசையை உணர்த்தி வரும் ஊ என்னும் பெயர்ச்சொல், ஆ
என்னும்  பெயரொடு  ஒத்த  விதிபெறும்.  அஃதாவது:  னகர  ஒற்றாகிய
சாரியை பெறும் என்றவாறு.
 

எ. டு:ஊன்குறை,  ஊன்சிதைவு,  தகவு,  பொலிவு  எனவரும். ‘ஆன்’
என்பது  போல  இச்சொல்லும்  ஊன்  என  ஒன்றியே நிற்றலின் சிவணும்
என்றார்.   ஊ   என்னும்   சுட்டெழுத்து  நீட்சியாகிய  இடைச்சொல்லை
நீக்குதற்கு ஊ என்னும் ஒருபெயர் என்றார்.
 

சூ. 270 :

அக்கென் சாரியை பெறுதலும் உரித்தே

தக்கவழி யறிதல் வழக்கத் தான

(68)
 

க-து :
 

இதுவுமது.
 

பொருள் :  மேற்கூறிய   ஊ   என்னும்   பெயர்  னகர   ஒற்றொடு
அக்குச்  சாரியை  உடன்  பெறுதலும்  உரித்தாகும். அங்ஙனம் பெறத்தக்க
இடம் சான்றோர் வழக்கினானே அறிந்து கொள்க.