நூன்மரபு249

உயிரீ றாகிய முன்னிலைக் கிளவியும்

புள்ளி யிறுதி முன்னிலைக் கிளவியும்

இயல்பாகுநவும் உறழ்பா குநவும்என்று

ஆயீ ரியல வல்லெழுத்து வரினே 

(தொகை-9)
 

எனத்  தொகைமரபினுள் கூறி ஈண்டு ‘‘முன்னிலை மொழிய’’ என்றதனான்
அவை முன்னிலை ஏவலாக வரும் ஏகார ஓகாரங்களின் அளபெடை ஈறாகி
நின்று, வல்லெழுத்தொடு புணருமிடத்து உறழ்ந்து புணரும் என்பதும்
 

தேற்ற எகரமும் சிறப்பின் ஒவ்வும்

மேற் கூறியற்கை வல்லெழுத்து மிகாஅ 

 

என  அடுத்துக் கூறுவதனான், அவை  உறழ்தலாகிய பொதுவிதியின் நீங்கி
இயல்பாகப்  புணருமென்பதும், முன்னிலை  வினையாயின்  மிகுமென்பதும்
பெறப்படுதலான் என்க.
 

விதி   ஒத்தலின்  ஒன்றென  முடித்தல்  என்பதனான் ஒகரமும் உடன்
ஓதப்பட்டதென அறிக.
 

எ. டு:ஏஎக்கொற்றா!  சாத்தா!  தேவா!   பூதா!  எனவும்  (ஏஎ-ஏவுக)
ஓஒக்கொற்றா! சாத்தா! தேவா! பூதா! எனவும் (ஓஒ-நீங்குக) வரும்.
 

இதனானும்  இடைச்சொற்கள் பெயர் வினைகளைச் சார்ந்து பெயராயும்
தொழிலாயும் நின்றுபுணருமென்பது தெளிவாகும்.
 

இவற்றை இடைச்சொற்புணர்ச்சி கூறுவதாக உரையாசிரியன்மார் கூறுவது
ஆசிரியர்  கருத்திற்கு  முரணாகும். மற்றும் இச்சூத்திரம்  எகரஒகரங்களின் இயல்புணர்த்துவதாக    அவர்   கூறுவர்.   அது   கருத்தாயின்    இது மொழிமரபின்கண் இருத்தல் வேண்டுமென்க.
 

சூ. 273 :

தேற்ற எகரமும் சிறப்பின் ஒவ்வும்

மேற்கூ றியற்கை வல்லெழுத்து மிகாஅ

(71)
 

க-து :

எகர ஒகரங்கள் பெயர்க்கு ஈறாயவழி எய்தும் விதி கூறுகின்றது.
 

பொருள் :தேற்றப்  பொருளில் வரும்  எகரமும் சிறப்புப்  பொருளில்
வரும்  ஒகரமும்  பெயர்க்கீறாக  நிற்குமிடத்து  மேலே   முன்னிலைக்கண்
வல்லெழுத்து  மிகும்   எனப்பட்ட   இலக்கணமாகிய   வல்லெழுத்துக்கள்
இவற்றின்கண் மிகா. என்றது; பெயர்க்கீறாய வழி இயல்பாகும் என்றவாறு.