நூன்மரபு251

பொருள் :ஏகார ஈற்றுச் சொல்லிறுதி வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்
கண்ணும் மேற்கூறிய அல்வழியொடு ஒத்த  இயல்பிற்றேயாம்.
 

எ. டு:ஏக்குறைத்தான், சிதைத்தான், தெரித்தான், பிணித்தான் எனவும்;
வேக்குடம் எனவும் வரும். (வேக்குடம் - வேதலை உடைய குடம்)
 

சூ. 277 :

ஏஎன் இறுதிக்கு எகரம் வருமே(75)

 

க-து :

எய்தியதன்மேற் சிறப்பு விதி கூறுகின்றது.
 

பொருள் :ஒருசார்  ஏகார  ஈற்றுச்  சொல்லிறுதிக்கு  எகரம் தோன்றி
வரும்.
 

எ. டு:  ஏஎக்கொட்டில்,   ஏஎச்சாலை,   துளை,   புழை  என வரும்.
எகரப்பேற்றினை மேலதனொடு ஒருங்கு கூறாமையான் இயல்பு கணத்திற்கும்
எகரம் வருதல் கொள்க.
 

எ.டு :ஏஎஞாற்சி, நேர்மை, வன்மை, அழகு எனவரும்.
 

சூ. 278 :

சேஎன் மரப்பெயர் ஒடுமர இயற்றே(76)

 

க-து : 

சே என்னும் மரப்பெயர் மெல்லெழுத்துப் பெறும் என்கின்றது.
 

பொருள் :சே என்னும் விலங்கினை உணர்த்தாமல் மரத்தை உணர்த்தி
நிற்கும்  பெயர்ச்சொல், ஒடு  என்னும் மரப்பெயர்க்குக் கூறிய இயல்பிற்றாய்
மெல்லெழுத்து மிக்கு வரும் என்றவாறு.
 

எ. டு:சேங்கோடு, செதிள், தோல், பூ எனவரும்.
 

சூ. 279 :

பெற்ற மாயின் முற்றஇன் வேண்டும்(77)

 

க-து: 

சே என்னும் விலங்குப் பெயர்க்குச் சிறப்பு விதி கூறுகின்றது.
 

பொருள்:சே  என்னும்  சொல்  பெற்றத்தை உணர்த்தி நிற்குமாயின்
இன்சாரியை நிறைவாகப் பெறல் வேண்டும்.
 

எ. டு:சேவின்  கோடு,  செவி,  தலை,   புறம்  எனவரும்.  ‘‘முற்ற’’
என்றதனான் இயல்புகணத்தும் இன்சாரியை கொள்க.
 

எ. டு:சேவின் ஞேயம், நலம், மடி, வால், இமில்  என வரும். சேமணி
எனச்  சாரியை  இன்றிவருதல்  இடைக்கால  வழக்காகலின்  புறனடையாற்
கொள்ளல்தகும்.