சூ. 280 : | ஐகார இறுதிப் பெயர்நிலை முன்னர் |
| வேற்றுமை யாயின் வல்லெழுத்து மிகுமே |
(78) |
க-து : | ஐகார ஈற்று அல்வழிப் புணர்ச்சி தொகைமரபினுட் பெறப்படுதலின், ஈண்டு வேற்றுமைப் புணர்ச்சியாமாறு கூறுகின்றது. |
பொருள் :ஐகார ஈற்றுப் பெயரிறுதிமுன் வல்லெழுத்து, வேற்றுமைப் பொருட்புணர்ச்சியாயின் மிக்குப்புணரும். |
எ. டு:யானைக்கோடு, செவி, தலை, புறம் எனவும் முல்லைக்கொடி, பூ; தாமரைக்கொடி, பூ எனவும் வரும். |
இனி, ஐகார உருபொடு புணர்ந்து நிலைமொழியாக நிற்கும் சொற்களுக்கும் இவ்விதி பொருந்தும். என்னை? உருபியலின்கண் ஐம்முதலிய ஆறு உருபுகளும் நிலைமொழியொடு வந்து புணருமாறு கூறியதன்றித் தாம் நிலைமொழியாக நின்று வருமொழியொடு புணருமாறு கூறினாரில்லை. காரணம் உருபுகள் தனித்து நிலைமொழியாதற்கு ஏலாமையான் என்க. எனவே, பெயரொடுகூடி நிலைமொழியாக நின்றவழி அவை அவ்வவ்வீறுகளாய் உயிர் மயங்கியலுள்ளும் புள்ளிமயங்கியலுள்ளும் குற்றியலுகரப் புணரியலுள்ளும் கூறும் விதிகளையே பெற்றுப்புணருமென்க. ஆசிரியர் ஏகாரம் ஓகாரம் முதலிய இடைச்சொற்களுக்கு ஈண்டுவிதி கூறியதும் அக்கருத்தானே என உணர்க. |
ஆதலின் உருபுகளும் உருபின் பொருட்டாய் வரும் சொற்களும் பெயர்களொடு கூடி நிலைமொழியாக நிற்குமிடத்து இரண்டாமுருபு ஐகார ஈற்றினுள்ளும் ஒடுவும், குவ்வும், அதுவும் குற்றியலுகரமாக மாறி விடுதலின் குற்றியலுகரப் புணரியலுள்ளும், இன்னும் ஆனும் கண்ணும் புள்ளிமயங்கியலுள்ளும் அடங்கும். |
இவற்றை உரையாசிரியன்மார் மிகையின் கண்ணும் புறனடையுள்ளும் அடக்கி ஆசிரியர்க்குக் குறை கற்பிப்பர். உருபுகள் அவ்வவ்வீறுகளுள் அடங்கிப் புணரும் என்பதனை ஆசிரியர் கூறுமாற்றானே நன்கு தெளியலாம். |